Friday, November 10, 2023

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17] வில் வித்தை விற்பன்னன்.


பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வயதான இளைஞன் ஒருவன்  சேர்ந்து வில்வித்தையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.



குருகுல ஆசிரியரும் வில்வித்தையை ஆழமாக கற்றுக் கொண்டவர். இளைஞனும் நல்ல ஆர்வத்துடன் இருந்து வந்தான். எனவே  அவரும் வித்தை முழுவதையுமே அவனுக்கு சொல்லி பயிற்சியும் கொடுத்தார். ஆண்டுகள் உருண்டோடின. இப்போது அந்த இளைஞனுக்கு வில்வித்தையில் அற்புதமான முன்னேற்றம். அவன் வானில் வேகமாக பறக்கும் கழுகு போன்ற பறவையையும் அடிப்பான், மற்றும் அவனுடைய வில்லில் ஒரேசமயத்தில் ஐந்து அம்புகள்வரை எய்வான். எல்லா அம்புகளும் குறிதப்பாமல் இலக்கை நோக்கி பாயும். ஜப்பான் தேசத்தில் நடந்த வில்வித்தை போட்டியில் அவனே முதலிடத்திற்கு தேர்வாகி அரசர் கையால் விருதும் பெற்றான்.


இதனால் அவனுக்கு இறுமாப்பு உண்டானது. இறுமாப்பு அலட்சியத்தை தந்தது, ஆணவத்தையும் தந்தது. இதனால் நொந்துப்போன அவனுடைய குரு அவனிடம், “இதோ பாரப்பா, நான் வில்வித்தையில் சிறந்தவன் தான், அதேபோல் அந்த வித்தை முழுவதையுமே உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நம்மிலும் வில்வித்தையில் மேலான ஒருவர் மலைக்கிராமத்தில் வசிக்கிறார், அவரிடம் சென்று நீ பயின்ற வித்தைகளை காட்டி அவரின் ஆலோசனையை கேள், அவர் உன்னை ஒரு வில் வித்தையாளன் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, நான் உன்னை நாட்டிலேயே தலைச்சிறந்தவன் என்று ஒப்புக்கொள்வேன்”, என்று கூறிவிட்டு மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியைக் கூறினார்.



இளைஞனும் மறுவார்த்தை பேசாமல் உடனே மலைக்கிராமத்திற்கு புறப்பட்டு அந்த வில்வித்தையாளன் குடிசைக்கு போனான். ஆனால் அச்சமயத்தில் அவர் குடிசையில் இல்லை. நெடுநேரம் காத்திருந்த பின்னர் அவர் வந்தார். கூனலிட்ட நடை மற்றும் கண்களில் வேறு பார்வைக்குறைவு. அவரை பார்த்ததும் இளைஞனுக்கு புஸ்ஸென்று ஆகிப்போனது. “என்ன இது, இவரா வில்வித்தையை கரைத்துக்குடித்தவர்?” என்று நினைத்துக் கொண்டான்.



அந்த முதியவரும் அவனைப்பார்த்து என்னவென்று கேட்க இளைஞனும் வந்த விஷயத்தைப்பற்றி கூறினான். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. குடிசைக்குள் சென்று வில்லையும் அம்பையும் கொண்டு வந்தார். வில் என்றால் அது மூங்கிலால் செய்யப்பட்டது. அம்பு என்பது சிறுகுச்சி மட்டுமே! இதை ஏளனமாக பார்த்தான் அந்த இளைஞன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.



முதியவர் மலை உச்சிக்கு சென்று விளிம்புக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளையின் நுனிக்கு ஆடாமல் அசையாமல் சென்று நின்றுக்கொண்டார். பின்னர் ஒருகாலை உயர்த்திக்கொண்டார், பின்னர் மூங்கில் வில்லில் அம்பை பூட்டி விநாடிக்கும் குறைவான நேரத்தில் aதை எய்தார். அம்பு வானில் பறந்துக்கொண்டிருந்த ஒரு பறவையை தாக்கி, அதை முதியவரின் கைகளில் விழ வைத்தது.


மெதுவாக மரக்கிளையில் நடந்துவந்த முதியவர் அவனிடம் பறவையைக் காண்பித்தார், அதன் இறக்கைகளில் அம்பு தைத்திருந்தது. பின் அம்பை எடுத்தவர், பறவையை பறக்க விட்டுவிட்டார். “இளைஞனே நீயும் நான் செய்ததைபோல் மலையின் விளிம்பில் உள்ள மரக்கிளையில்  நடந்து சென்று oரு பறவையை அடிப்பாயாக”, என்று சொல்லிவிட்டு ஒரு பாறைமேல் அமர்ந்துக் கொண்டார்.


இளைஞன் முதலில் மலையின் விளிம்புக்கு நடந்து சென்றான். அதலபாதாளம் அப்பாடா விழுந்தால் எலும்புக்கூட தேறாது என்று நினைத்த அவனுடைய உடல் மெதுவாக நடுங்கியது. அடுத்து அந்த கிளையில் கால்வைத்ததும் உடலானது ஜன்னி கண்டாற்போல் நடுநடுங்கி விட்டது. அவன் எவ்வளவு முயற்சித்தும் மேலே போக முடியவில்லை. பிறகு எங்கே அங்கே சென்று அம்பை பூட்டி பறவையை வீழ்த்துவது?


தன் தோல்வியை ஒப்புக்கொண்ட அவன் முதியவரிடம் திரும்பிவந்து ஒன்றும் பேசாமல் தலைவணங்கி நின்றான். அவனுடைய ஆணவமும் அகன்றது.



“மனதில் உடலில் பரிபூர்ணமாக அமைதியை கொண்டுவந்து விட்டால் அவனே பெரிய வீரனாவான். அவனை ஜெயிக்க யாராலும் முடியாது, நீ சென்று முதலில் அமைதியடைவாய் பிற்பாடு இங்கே வருவாய்”, என்று சொன்ன முதியவர் குடிசைக்குள் சென்று விட்டார்.


போதனை: உடலில் மனதில் பரிபூர்ணமான அமைதியே மனிதனின் மாபெரும் சாதனையாக இந்த உலகில் இருக்கும்


Wednesday, November 8, 2023

[16 ] நல்லதையே நினைப்பாயாக.

 நல்லதையே நினைப்பாயாக.


ஒருவன் அடர்ந்த காட்டின் வழியே பயணம் செய்துக் கொண்டிருந்தான். கற்கள் முட்கள் ஆறுகள் என பெரும்பெரும் இடர்கள் வந்தாலும் துணிந்து அவன் போய்க் கொண்டிருந்தான். இடையிடையே மிருகங்களின் ஓசையும் கேட்கும். எனினும் அவனும் பயந்துவிடவில்லை. இப்படியாக பகல் பனிரெண்டு மணியளவில் மிகவும் களைத்துப்போன அவன் ஒரு மாபெரும் மரத்தின் அடிவேரில் அமர்ந்தான்.



அவனிடம் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. உணவும் கிடையாது. போட்டிருந்த ஆடையும் வேர்வையினாலும் தூசிகளினாலும் மிகவும் அழுக்காக இருந்தது. உடலெங்கும் வியர்வை வழிந்து கசகசத்தது. “ஐய்யோ நான் எப்படி இந்த காட்டை கடப்பேன், பசி வேறு உயிர் போகிறதே, இப்போது மட்டும் சாப்பிடுவதற்கு ஏதாவது இருந்தால் மிகவும் நன்றாக இருக்குமே”, என்று நினைத்தான்.



அவன் அமர்ந்திருந்தது நினைத்தையெல்லாம் கொடுக்கும் கற்பக விருட்சம் எனும் கற்பக மரம். எனவே தங்கத்தட்டில் அறுசுவை உணவோடு தங்கக்குடுவையில் குடிக்க நீரும் அவன் முன் தோன்றியது.



 எதையும் யோசிக்காமல் அவன் உணவை தின்று முடித்தான். உண்டதும் நீரை வயிறு முட்டக்குடித்து விட்டதும் தூக்கம் சொக்க வைத்தது. “ஆஹா இப்போது கட்டிலும் பஞ்சணையும் நல்ல காற்றும் அடித்தால் நன்றாக இருக்குமே”, என்று அவன் நினைத்து முடிப்பதற்குள், அங்கே பஞ்சணையோடு கட்டிலும் தோன்றி விசிறி விடுவதற்கு அழகிய மங்கையரும் தோன்றினர். இந்த முறையும் அவன் யோசிக்கவேயில்லை. பஞ்சணையில் ஏறி படுத்து தூங்கி விட்டான்.


பிறகு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்தவன் குளிப்பதற்கு ஒரு அழகிய குளம் வேண்டுமே என்று நினைப்பதற்குள் அங்கே அழகிய குளம் உண்டானது. சட்டென்று அதில் குளித்து முடித்தவுடன் பட்டாடை வேண்டுமே என்று கேட்க பட்டாடையும் உண்டாயின.



அதை போட்டுக்கொண்டு யோசித்தான். “என்ன நாம் நினைப்பது எல்லாமுமே நடக்கிறததே? இப்போது புலி ஒன்று இங்கே தோன்றி நம்மை அடித்து விழுங்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் நடந்து விடுமோ?” என்று அவன் நினைப்பதற்குள் பசித்த புலியொன்று அங்கே தோன்றி அவனை அடித்து விழுங்கி விட்டது.



போதனை: எப்போதுமே நல்லதையே நினைக்க வேண்டும். நடப்பது யாவும் நல்லதற்கே என்று நினைத்து நம் காரியங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தால் பிற்பாடு நல்லதே விளையும்.


Friday, November 3, 2023

[ 15 ] எமனின் கயிறு....

 எமனின் கயிறு

உலகப்புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் கைவைக்காத சிலைகளே இல்லை என்று பேர் பெற்றிருந்தான். ஏதேனும் தத்ரூபமாக சிலை இருந்தால், அதை செய்தவன் இவன் தான் என்று கூறும்படி அவனுடைய புகழானது எங்கெங்கும் பரவியிருந்தது, தேவர்களும் கின்னர்களும் கிம்புருடர்களும் இராட்ஸர்களும் இவனுடைய கைத்திறனை வெகுவாக போற்றி வந்தனர் என்றால் அவனுடைய திறமை எத்தளவுக்கு இருக்கும் என யூகம் செய்து கொள்ளலாம்.


இப்படியாக பேரும் புகழும் படைத்த அவனுக்கு இயல்பாகவே இயற்  கையாகவே திமிரும் அகங்காரமும் இருந்தது. மற்றவர்களின் படைப்புகளை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 


ஆனாலும் மனிதன் எவ்வளவு நல்லவனாக திறமைசாலியாக இருந்தாலும் அவன் உடலுக்கு என்று ஒரு இறுதிக்காலம் உண்டல்லவா? அந்த சிற்பிக்கும் இறுதிக்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தச்செய்தியை அறிந்திருந்த யமலோகத்தை சேர்ந்தவர்கள் சிற்பிக்கு தெரியப்படுத்தி விட்டனர். சிற்பிக்கோ இவ்வுலகத்தைவிட்டு போக மனமில்லை. அதனால் யமனையே ஏமாற்றிவிட தீர்மானித்து விட்டான்.


அதனால் தன்னைப்போலவே தத்ரூபமாக ஆறு சிலைகளை செய்தான். யமன் வரும்நாளன்று அந்த சிலைகளை வரிசையாக படுக்கை வாக்கில் கிடத்திவிட்டு நடுவில் ஏழாவது சிலையாக தானும் கிடந்தான்.


பாசக்கயிற்றோடு எமனும் வந்தான். ஆனால் சிற்பியோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர்கள் அங்கே கிடப்பதைக்கண்டு குழம்பிபோய் விட்டான். நேரமோ நெருங்கிக்கொண்டே இருந்தது. அவன் ஒரேஒருமுறை மட்டுமே தன்னுடைய பாசக்கயிற்றை வீச வேண்டும். தவறிவிட்டால் பிறகு மீண்டும் அவன் அதை வீசமுடியாது. இது சிற்பிக்கும் தெரியும்!


உடனே எமன், “ஆஹா என்ன அற்புதமான படைப்புகள், அவற்றை செய்தவன் கலையின் உச்சத்தையும் தொடுகிறவனாக இருப்பான், என்னே ஆண்டவனின் படைப்பு”, என்று சொல்லிவிட்டு படுத்து கிடந்திருந்த ஏழு சிலைகளின் முகங்களையும் கூர்ந்து கவனித்தான்.


அங்கே இருந்த சிற்பியானவன், “ஆஹா நம்முடைய படைப்பை எமனே போற்றுகிறான், ஆமாம் உலகிலேயே நான் தான் தலைச்சிறந்த சிற்பி” என்று நினைத்து புளகாங்கிதமடைந்தான். அந்த தற்பெருமை மனதில் இருந்து வாயினில் புன்னகையாக மலர்ந்தது. இதைக்கண்டுகொண்ட யமன் தன் பாசக்கயிற்றை சிற்பியின் கழுத்தினில் வீசி உயிரை எடுத்துக் கொண்டான்.


போதனை. எப்போதுமே அகங்காரமும் தற்பெருமையும் கூடாது. அவை உடனிருந்தே கொல்லும். 


[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...