[17] வில் வித்தை விற்பன்னன்.
பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வயதான இளைஞன் ஒருவன் சேர்ந்து வில்வித்தையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான்.
குருகுல ஆசிரியரும் வில்வித்தையை ஆழமாக கற்றுக் கொண்டவர். இளைஞனும் நல்ல ஆர்வத்துடன் இருந்து வந்தான். எனவே அவரும் வித்தை முழுவதையுமே அவனுக்கு சொல்லி பயிற்சியும் கொடுத்தார். ஆண்டுகள் உருண்டோடின. இப்போது அந்த இளைஞனுக்கு வில்வித்தையில் அற்புதமான முன்னேற்றம். அவன் வானில் வேகமாக பறக்கும் கழுகு போன்ற பறவையையும் அடிப்பான், மற்றும் அவனுடைய வில்லில் ஒரேசமயத்தில் ஐந்து அம்புகள்வரை எய்வான். எல்லா அம்புகளும் குறிதப்பாமல் இலக்கை நோக்கி பாயும். ஜப்பான் தேசத்தில் நடந்த வில்வித்தை போட்டியில் அவனே முதலிடத்திற்கு தேர்வாகி அரசர் கையால் விருதும் பெற்றான்.
இதனால் அவனுக்கு இறுமாப்பு உண்டானது. இறுமாப்பு அலட்சியத்தை தந்தது, ஆணவத்தையும் தந்தது. இதனால் நொந்துப்போன அவனுடைய குரு அவனிடம், “இதோ பாரப்பா, நான் வில்வித்தையில் சிறந்தவன் தான், அதேபோல் அந்த வித்தை முழுவதையுமே உனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நம்மிலும் வில்வித்தையில் மேலான ஒருவர் மலைக்கிராமத்தில் வசிக்கிறார், அவரிடம் சென்று நீ பயின்ற வித்தைகளை காட்டி அவரின் ஆலோசனையை கேள், அவர் உன்னை ஒரு வில் வித்தையாளன் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, நான் உன்னை நாட்டிலேயே தலைச்சிறந்தவன் என்று ஒப்புக்கொள்வேன்”, என்று கூறிவிட்டு மலைக்கிராமத்திற்கு செல்லும் வழியைக் கூறினார்.
இளைஞனும் மறுவார்த்தை பேசாமல் உடனே மலைக்கிராமத்திற்கு புறப்பட்டு அந்த வில்வித்தையாளன் குடிசைக்கு போனான். ஆனால் அச்சமயத்தில் அவர் குடிசையில் இல்லை. நெடுநேரம் காத்திருந்த பின்னர் அவர் வந்தார். கூனலிட்ட நடை மற்றும் கண்களில் வேறு பார்வைக்குறைவு. அவரை பார்த்ததும் இளைஞனுக்கு புஸ்ஸென்று ஆகிப்போனது. “என்ன இது, இவரா வில்வித்தையை கரைத்துக்குடித்தவர்?” என்று நினைத்துக் கொண்டான்.
அந்த முதியவரும் அவனைப்பார்த்து என்னவென்று கேட்க இளைஞனும் வந்த விஷயத்தைப்பற்றி கூறினான். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. குடிசைக்குள் சென்று வில்லையும் அம்பையும் கொண்டு வந்தார். வில் என்றால் அது மூங்கிலால் செய்யப்பட்டது. அம்பு என்பது சிறுகுச்சி மட்டுமே! இதை ஏளனமாக பார்த்தான் அந்த இளைஞன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.
முதியவர் மலை உச்சிக்கு சென்று விளிம்புக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளையின் நுனிக்கு ஆடாமல் அசையாமல் சென்று நின்றுக்கொண்டார். பின்னர் ஒருகாலை உயர்த்திக்கொண்டார், பின்னர் மூங்கில் வில்லில் அம்பை பூட்டி விநாடிக்கும் குறைவான நேரத்தில் aதை எய்தார். அம்பு வானில் பறந்துக்கொண்டிருந்த ஒரு பறவையை தாக்கி, அதை முதியவரின் கைகளில் விழ வைத்தது.
மெதுவாக மரக்கிளையில் நடந்துவந்த முதியவர் அவனிடம் பறவையைக் காண்பித்தார், அதன் இறக்கைகளில் அம்பு தைத்திருந்தது. பின் அம்பை எடுத்தவர், பறவையை பறக்க விட்டுவிட்டார். “இளைஞனே நீயும் நான் செய்ததைபோல் மலையின் விளிம்பில் உள்ள மரக்கிளையில் நடந்து சென்று oரு பறவையை அடிப்பாயாக”, என்று சொல்லிவிட்டு ஒரு பாறைமேல் அமர்ந்துக் கொண்டார்.
இளைஞன் முதலில் மலையின் விளிம்புக்கு நடந்து சென்றான். அதலபாதாளம் அப்பாடா விழுந்தால் எலும்புக்கூட தேறாது என்று நினைத்த அவனுடைய உடல் மெதுவாக நடுங்கியது. அடுத்து அந்த கிளையில் கால்வைத்ததும் உடலானது ஜன்னி கண்டாற்போல் நடுநடுங்கி விட்டது. அவன் எவ்வளவு முயற்சித்தும் மேலே போக முடியவில்லை. பிறகு எங்கே அங்கே சென்று அம்பை பூட்டி பறவையை வீழ்த்துவது?
தன் தோல்வியை ஒப்புக்கொண்ட அவன் முதியவரிடம் திரும்பிவந்து ஒன்றும் பேசாமல் தலைவணங்கி நின்றான். அவனுடைய ஆணவமும் அகன்றது.
“மனதில் உடலில் பரிபூர்ணமாக அமைதியை கொண்டுவந்து விட்டால் அவனே பெரிய வீரனாவான். அவனை ஜெயிக்க யாராலும் முடியாது, நீ சென்று முதலில் அமைதியடைவாய் பிற்பாடு இங்கே வருவாய்”, என்று சொன்ன முதியவர் குடிசைக்குள் சென்று விட்டார்.
போதனை: உடலில் மனதில் பரிபூர்ணமான அமைதியே மனிதனின் மாபெரும் சாதனையாக இந்த உலகில் இருக்கும்