தீர்க்கப்படமுடியாத கேள்வி
கடவுள் பிரபஞ்சத்தை படைத்த பிறகு அதில் ஒரு கிரகத்தை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்து பூமி என பெயரிட்டு பின் பலவித ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் ஆறுகளையும் கடலையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் படைத்து விட்டு அதன்பின் எதற்கும் இருக்கட்டும் என ஒரு ஆண்மகனை இருபது வயதில் படைத்துவிட்டு அவனிடம் சொன்னார்.
“மகனே என்தன் உயரிய படைப்பே, உனக்கு இந்த உலகெலாம் சொந்தம். நீ பசியெடுத்தால் கனி காய்கறிகளை உண்பாய், ஆறுகளிலும் அருவிகளிலும் நீந்தி மகிழ்வாய், பச்சைபசும் புல்வெளியில் உறங்குவாய், மான்களோடும் மயில்களோடும் ஓடியாடி மகிழ்வாய், உனக்கென்று எந்தவித கவலையுமில்லை, எனவே ஆனந்தமாக இன்றுபோல் என்றுமே
இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக”, என்று கூறிவிட்டு மறைந்து போனார்.
அந்த ஆண்மகன் கடவுள் சொன்னது போலவே காய்கனிகளை உண்டும் ஆறு அருவிகளில் நீந்தியும் மயிலோடு மானோடு விளையாடியும் ஆனந்தமாக பொழுதைக் கழித்தான். இப்படியாக சிலகாலம் சென்றது.
அது வசந்தகாலம். எங்கணும் பச்சைபசேல் என தாவரங்கள் பூத்துக்குலுங்கின. மழை வரும் போலிருந்தது ஆனால் வாராது, அவன் உடலெங்கும் ஒருவித குளிர்ச்சி, வயிற்றில் பனிப்பந்து ஒன்று ஊடுருவியதைப்போல் இனம்புரியாத உன்மத்தம், அவனுக்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
அப்போது மயிலொன்று சிறகுகளை விரித்து அங்கேயும் இங்கேயும் சுற்றுவதைக் கண்டான். அவ்வேளை இன்னொரு மயில் இறகுகளற்ற மயில் அதனோடு கூடி முயங்குவதை கண்டான். அதேபோல் இரண்டு முயல்கள், யானைகள், நாய்கள், குதிரைகள் என பலவகையான மிருகங்கள் தமக்குள் உரசிக் கொள்வதும் வினோதமான ஒலிகளை எழுப்பிக்கொள்வதும் பின் வெறிப்பிடித்தாற் போல் ஒன்றுகூடி இயங்குவதையும் கண்டான்.
உடனே கடவுளை அவன் அழைத்து “கடவுளே எனக்கென இந்த உலகை படைத்தீர் காய்கனிகளை படைத்தீர் இன்னும் எவ்வளவோ தந்தீர்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்கள், இந்த ஆடுமாடு குதிரை யானைகளெல்லாம் தமக்கென்று ஒரு துணையைப் பற்றிக்கொண்டு சந்தோஷமாக இருக்கின்றனவே! தம் இன்பதுன்பங்களை அவைகளோடு பகிர்ந்து கொள்கின்றனவே, அதுபோல் எனக்கும் ஒரு துணை வேண்டும்”, என்று மனமுருகி கேட்டான்.
கடவுள் தான் விட்டாலும் விதி விடாது என்று நகைத்துக்கொண்டே பெண் ஒருத்தியை படைத்தார். பின்பு மறைந்து போனார்.
ஆண் அவளை கண்டு சொக்கி போய் நின்றான். அவ்வளவு பேரழகு அவள்! பாதம் துவங்கி உச்சந்தலை வரையில் மாசுமறுவின்றி பார்க்கும் பார்வையே வழுக்கின்றதே, பின் தொட்டால் கைகள் எப்படி அங்கங்களில் நிற்கும்? தந்ததால் செதுக்கியது போன்ற உடல் வண்ணம் ! ஆங்காங்கே நிறம் தங்கமென கார்மேகமென கருவண்டென கோவைப்பழமென மாறுகிறதே என்ன விந்தை! அவளின் உடல் மணம்! ஆஹா தெய்வமே! எப்பேறு பெற்றேன் நான்! அவன் அவளை அள்ளிக்கொண்டான் உச்சி முகர்ந்து கொண்டாடினான் ஆசைத்தீர அனுபவித்தான்! இப்படியே சிலகாலம் போனதும் அவனுக்கு சலிப்பு ஏற்ப்பட்டது. கடவுளை அழைத்தான்.தன் குறைகளை கூறினான்.
“ஐய்யோ கடவுளே எனக்கென்று எப்படி படைத்தாயோ இபபெண்ணை?ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் நாட்கள் கழியக்கழிய அவள் ஏதோவொன்றை வருந்தி நின்றாள். என்னவென்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள். சதாசர்வகாலமும்
என்னால் முடியாத காரியங்களை செய்யும்படி கேட்கிறாள். அதோ அந்த மயிலைப்பாருங்கள், அவை
எப்படியெல்லாம் கூடிக்கொண்டே மயங்குகின்றன, இதோ இந்த முயல்களைப் பாருங்கள், அவை ஆனந்தமாக
சுற்றித் திரிகின்றன, அவை போல நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என நச்சரித்துக்கொண்டே
இருக்கிறாள், எனவே இவள் எனக்கு வேண்டாம், அழைத்துக்கொண்டு செல்லுங்கள்”, என்று கூறி
நின்றான்.
“அப்படியே
ஆகட்டும்”, என்ற கடவுள் அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு மறைந்து போனார்.
சிலகாலங்களுக்கு
அந்த ஆண் தனிமையில் இருந்தபடி ஏகாந்தத்தை அனுபவித்தபடி ஆனந்தமாக இருந்தான். அடுத்த
வசந்தகாலமும் வந்தது. இப்போது விலங்குகள் யாவுமே பழையபடி தமக்குள் கூடி முயங்குவதை
மயங்குவதை கண்ணுற்ற அவனுக்கு அந்த பெண்ணின் நினைப்பு உடலெங்கும் மனமெங்கும் தோன்றி
இம்சை கொடுக்கலாயிற்று. “ஐய்யோ வராது வந்த செல்வமாக வந்த அந்த புதையலை இரத்தினத்தை
நாம் நம் அறிவுக்கெட்டதனத்தால் இழந்து போனோமே, இனிமேல் என் வாழ்க்கை அவளின்றி ஒருகணமும்
ஆனந்தமாக நகராது, எனவே அவள் வேண்டும்”, என்று நினைத்து கடவுளை அழைத்து அவளை மீண்டும்
வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.
கடவுள்
மனதுக்குள் சிரித்தப்படி ஒன்றும் சொல்லாமல் அந்தப்பெண்ணை அழைத்து அவனிடம் கொடுத்துவிட்டு
மறைந்து போனார்.
“ஆஹா
நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமென நினைத்த அவன் அவளுடன் வாழலானான். ஆனால்
சிலகாலந்தான்! மீண்டும் கடவுளை அழைத்தான், “ஐய்யோ கடவுளே, இவளை என் கண்படாமல் எங்காவது
அழைத்துச்சென்று மறைந்து விடுங்கள், எனக்கு இவளை பிடிக்கவேயில்லை, சதா ஏதேனும் நச்சரித்துக்கொண்டே
இருக்கிறாள், அதனால் நான் தவம் செய்யப்போகிறேன், தயைசெய்து இவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுங்கள்”,
கடவுளும் அவனுடைய வேண்டுகோளை இரண்டாவது முறையாக நிறைவேற்றிக் கொடுத்தார்.
இப்போது
தன்னந்தனிமையாக அவன் வாழத்தொடங்கினான். மூன்றாவது தடவையாக வசந்தகாலமும் வந்தது. ஆனால்
முன்னர் பட்ட கஷ்டங்களை நினைத்து அவன் பொறுமை காத்தான், ஆனால் சிலநாட்களுக்குதான்!
அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை, “ஆஹா என்ன இது அவள் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது போலிருக்கிறதே, ஒரு சின்ன வேலைக்குக்கூட
அவள் என் பக்கத்தில் இருக்க வேண்டும் போலிருக்கிறதே, ஐய்யோ கடவுளே உடனே அவளை எனக்கு
தருவாயாக”, வேண்டினான்.
உடனே
கடவுள் அவன்முன் உதயமாகி அவளை தந்து அருளினார். ஆனால் சிலகாலத்தில் அவனுக்கு அவள் மேல்
சலிப்பு ஏற்படவே மீண்டும் கடவுளை அழைத்து அழைத்துச்செல்லும்படி கூறினார். இந்தமுறை
கடவுளுக்கே கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
“அடேய்
மானிடப்பதரே, நீ வேண்டுமென்று சொல்வாய், பின்னர் வேண்டாம் என்று சொல்வாய், அதற்கு அடிபணிந்து
நானும் வேலை செய்தேன், ஆனால் இனிமேலும் இதுபோன்று நடக்காது. நீ எப்போது உறுதியாக ஒரேமுடிவை
எடுக்கிறாயோ அப்போது சொல், நிறைவேற்றி வைக்கிறேன், அதாவது இந்தப்பெண் உனக்கு வேண்டுமா
அல்லது வேண்டாமா என்று சொல், ஆனால் ஒரு முடிவை நீ எடுத்துவிட்டால், பிறகு அந்த முடிவை
மாற்ற நான் நினைத்தாலும் கூட முடியாது, எனவே நன்றாக யோசித்து பதிலை திண்ணமாக உரைப்பாயாக”
இவ்வாறு சொன்ன கடவுள் அந்தப்பெண்ணை அவனிடமே விட்டுவிட்டு மறைந்து போனார்.
அன்றிலிருந்து
பெண்ணை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என சிலகாலம் நினைப்பதும், இவள் எப்போதுமே வேண்டாம்
என சிலகாலம் நினைப்பதுமாக அந்த ஆண் வாழ்ந்து வருகிறான்.
[ இந்தக்கதை
ஒரு ஆண்பார்வையில் எழுதப்பட்டது. ஒரு பெண் பார்வையில் எழுதப்பட்டால் இந்த கதையின் முடிவானது
ஒருவேளை மாறக்கூடும் ]
No comments:
Post a Comment