தொப்புள் கொடி.
நகரமும்
அல்லாது கிராமமும் அல்லாத சுமாரான அளவில் ஆனால் எழிலான ஊர். ஒட்டுமொத்தமாக சுமார் இருநூறு
வீடுகள், பெரும்பாலும் நாட்டுஓடுகள் வேய்ந்த பெரிதான வீடுகளைக் கொண்டிருந்த ஊர். எல்லையில்
“ஏரியூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது”, என்ற எழுதப்பட்ட பெயர்ப்பலகை பெரியளவில் வரவேற்றுக் கொண்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை
பகல் நான்குமணி, மாலைவேளை நெருங்கிக்கொண்டேவர தைமாத குளிர் லேசாக அடித்தது. ஏழு வயதான
தெய்வநாயகி வீட்டின் திண்ணையிலே கையில் புதுத்துவாலையுடன் நிலைக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய பாட்டியானவள் ஒரு தாம்பாளத்தட்டில் குங்குமத்தை இட்டு கரைத்துக்கொண்டு கூடவே
வெற்றிலைப்பாக்கு மற்றும் துண்டுகற்பூரத்தை எடுத்துக்கொண்டு திண்ணையில் வைத்தாள்.
“அடி தெய்வா இத கொஞ்சம் பார்த்துக்கோ”, என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
ஆனால் அவள் பாட்டியின் குரலை கவனியாமல் தெரு முனையைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
அன்றுபார்த்து
தெய்வநாயகியை அரவணைத்துக்கொள்ள யாருமில்லை. அவளிருந்த அந்த நாற்பதடி அகலத்தெருவே வெறிச்சோடிக்
கிடந்தது. சற்றுநேரம் போனதும் தெருதிருப்பத்தின் முனையில் ஒரு கார் திரும்பிவருவதை
தெய்வநாயகி கண்டுக்கொண்டாள். அடுத்த இரண்டு நிமிடங்களில் கார் அவளுக்கு முன்பாக நிற்க,
கதவை திறந்துக்கொண்டு, முதலில் தாத்தாவும் அப்பாவும் இறங்கினார்.
“தெய்வா, ஆயாவை கூப்பிட்டு ஆரத்தியை எடுக்கச்சொல்லு”, தாத்தா
கூறினார். ஆனால் தெய்வா அவர் கூறுவதை கவனியாமல் காரினுள் எட்டிப்பார்த்தாள். காரின்
பின்னிருக்கையில் அவள் அம்மா களைப்புற்ற முகத்தில் புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்.
அவளின் இருகைகளிலும் மடியில் வைத்து உடலெல்லாம் துணியால் மூடியிருக்கும், சற்றே கருத்தநிறத்தில்
கையை சப்பிக்கொண்டு குழந்தை படுத்துக்கொண்டிருந்தது.
தெய்வாவுக்கு
முகமெல்லாம் சந்தோஷமழை. “ஐ தம்பி பாப்பா வந்துட்டான்”, என்று
கூவிவிட்டு, “ஆயா சீக்கிரமா ஆரத்தி எடு”, என்று அவள் பாட்டியை பார்த்து கத்தினாள்.
பாட்டியும் காரை விட்டிறங்கிய அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஆரத்தி சுற்றி வீட்டிற்குள்
அனுப்பிவைத்தாள்.
படுக்கையறைக்குள்
மெல்ல நுழைந்த தெய்வநாயகி, அம்மாவானவள் கூடத்திற்குள் நுழைய, குழந்தை தனியே மேல்விதானத்தை
பார்த்தப்படி அமைதியாக கைகால்களை அசைத்துக்கொண்டிருப்பதை கண்டாள். கிட்டேபோய் குழந்தையை
தொட்டுப்பார்த்தாள், படுமென்மையாக இருந்தது, முகம் எவ்வளவு அழகு, கைகளும் அழகுதான்,
மார்பும் அழகுதான்…இது என்ன? வயிற்றிலிருந்து ஏதோ பூச்சிபோல்
கன்னங்கரேலென்று…
உவே பார்க்கவே
பிடிக்கவில்லை. சட்டென்று ஓடிவந்து கூடத்திற்குள் இருந்த பெட்டிமீது அமர்ந்து கொண்டாள்.
அப்போது அவள் முகம் வாட்டமுற்றிருந்தது. எல்லோரும் தாயும்சேயும் நலத்தைக் கவனிக்கும்
மும்முரத்தில் இருந்ததால் அவளின் வாட்டத்தை கவனிக்க நேரமில்லை.
மறுநாள்
பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த தெய்வநாயகி உண்டுவிட்டு அப்படியே கூடத்தில் பாய்போட்டு
படுத்தாள். இரவுவரை தூங்கி கொண்டிருந்தாள். இப்படியே மூன்று நாட்கள் போனது. ஆனால் அவள்
படுக்கையறைக்குள் நுழைந்தாளில்லை. முதலில் அதை கவனித்தவர் அவளின் தாத்தாதான்.
ஒருநாள்
சாயந்திரம் அவளை மடியில் ஏந்திக்கொண்ட அவர், “என்ன என் செல்லத்துக்கு புது பாப்பா புடிக்கலையா?”
என்று கேட்டார். அவள் முகஞ்சுளித்துக்கொண்டே சொன்னாள், “இல்ல புடிச்சிதான் இருக்கு,
ஆனாக்கா அது வயித்துல தொப்புள்ள கறுப்பா என்னமோ, ப்பா பாத்தாலே புழு மாரி இருக்கு,
பாக்கவே புடிக்கல, அதான்….” என்று உதட்டை சுழித்தாள்.
தாத்தா
மெல்ல சிரித்துகொண்டே எழுந்து உள்ளறைக்கு சென்று இரண்டு சிறு வெள்ளிச் சிமிழ்களையும்,
இரண்டு தாயத்துகளையும் கொண்டுவந்து, மேஜையில் வைத்தார். பின் தாயத்துகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து
அதன் மேலே கைவிரலால் அழுந்த துடைத்தார். வியர்வை அழுக்கு பட்டவுடனே அந்த தாயத்தில்
“தெய்வநாயகி”, என்ற பெயர் பளிச்சிட்டது. “அட என் பேரு”, வியப்படைந்து
தெய்வநாயகி கூவினாள். தாத்தா அதில் மெல்லிய கயிறொன்றை கோர்த்து அவளின் இடுப்பில் அழுத்தமாக
கட்டிவிட்டார். பின் சிமிழை எடுத்தவர் அதை திறந்து தெய்வநாயகியிடம் காண்பித்தார். உள்ளே
கறுப்பாக மரவேர் போல் ஏதோ இருந்தது.
“என்னது தாத்தா”, தெய்வா கேட்டாள். “அதுவா நீ பொறந்தப்போ இல்ல,
உன் தொப்புள்ள இருந்து உதிந்து போன கொடி, இப்ப பாப்பாவுக்கு இருக்குல்ல, அதுபோல”. ஆக
தொப்புள்கொடி உதிர்ந்துபோகும் என தெய்வாவுக்கு புரிந்துபோனாலும் அதை எதற்கு இவ்வளவு
பத்திரமாக வெள்ளிச்சிமிழில் வைத்து பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள் என்ற கேள்வி எழுவே
தாத்தாவை புதிருடன் பார்த்தாள். அவள் கேள்வியை அவர் புரிந்துகொண்டார்.
“உனக்கு தெரியாதில்ல, அம்மா வயித்துகுள்ளாற
பாப்பா இருக்க சொல்ல அதுக்கு சாப்பிற பொருள் எல்லாமே இந்த தொப்புள்கொடி வழியாதான் போகும்.
இப்ப பிறந்தாச்சா, கொஞ்சநாள்ல உதிந்துபோகும், அதை காயவச்சி ஒரு தாயத்தல அடச்சி சம்பந்தப்பட்டவங்க
கழுத்திலியோ இடுப்பிலோ கட்டிடுவாங்க, மீதத்த சிமிழல அடச்சி பத்திரப்படுத்திடுவாங்க.
இப்ப அவங்களுக்கு எதனாச்சும் பயங்கர ஜூரமோ அல்லது வேறெதவாது வைத்தியரால தீக்கமுடியாத
வியாதி வந்திச்சுன்னு வச்சுக்க, அப்ப இதிலேயிருந்து ஒரு துளி அளவுக்கு எடுத்து பால்லியோ,
தேன்லியோ கலந்து சாப்பிட்டாக்கா உடனே குணம் அடைஞ்சிடுவாங்க”, தாத்தா
சிரிப்புடன் சொல்லி முடித்தார்.
“ஓஹோ அதான் விஷயமா? இது எனக்கு தெரியாமபோச்சே,
ஆமா நம்ம ஊர்ல எல்லாருக்கும் இது தெரியுமா?”
என்று கேட்டாள். “ஓ எல்லாருக்கும் தெரியும், இந்தியா முழுக்க, சமஸ்கிருதம் இருக்கு
இல்ல, கோவில்களில் மந்திரம் கூற உபயோகிக்கும் மொழி, அதல இதுக்கு பெயர் தவிஜுரஷ்ஷா”, தாத்தா
அன்புடன் கூறினார்.
“இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியாம போயிடிச்சே”,
என்று கூவிய தெய்வநாயகி படுக்கையறைக்கு ஓடோடிச்சென்று குழந்தையின் தொப்புள்கொடியில்
முத்தமொன்று வைத்தாள்.
[ பழமையை தொலைத்து புதுமையை வரவேற்க வேண்டும். அதேசமயம் நம்முடைய பழமையில் பாரம்பரியத்தில் எது எதுவெல்லாம் காலத்திற்கு நல்லதோ அதை அதையெல்லாம் விட்டுவிடாமல் சிக்கென பற்றிக் கொள்ள வேண்டும் ]
No comments:
Post a Comment