Monday, October 23, 2023

[ 10 ] இராமாயணத்தின் முடிவுரை.

 

 இராமாயணத்தின் முடிவுரை.

 

இராமாயணம் நாம் நினைப்பது போல ஒரே கதை கொண்டதல்ல, அது ஆயிரக்கணக்கான கிளைக்கதைகளை கொண்டதாகும். அதேபோல் அதன் முடிவுரையும் இராவணனை கொன்று இராமன் நல்லாட்சி நடத்தினான் என்று முடியக் கூடியதுமல்ல. இந்தியா முழுமைக்கும் அதையும் தாண்டி ஏறத்தாழ அனைத்து ஆசிய நாடுகளிலுமே, இராமாயணம் பல்வேறு வடிவங்களில் வழங்கி வருகின்றது. நாம் தமிழ்நாட்டில் கம்பன் வழங்கிய இராம அவதாரத்தை பிடித்தே  தொங்கிக் கொண்டிருக்கின்றோம். கம்பன் ஒரு கலாரசிகன் தலைசிறந்த கவிதையுள்ளம் கொண்டவன், ஆனால் அவனும் வடமொழியிலிருந்த இராமாயணத்தை, தமிழில் கவிதை வடிவிலே மொழி பெயர்க்கும்போது, கேடுகெட்ட விஷயம்பல செய்து விட்டான். நிற்க!

 இராமாயணம் என்பது பல முடிவுகளை சொல்வது, பொதுவாக இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் சீதையுடன் சென்றான், சீதையை இராவணன் சிறையெடுத்தான், இராமன் அவன் மேல் படை தொடுத்து வென்று கொன்று, சீதை சிறைமீட்டு, பின்னர் வடநாடு திரும்பி நல்லாட்சி நடத்தினான், என்றே அறிந்திருக்கின்றோம்!

 ஆனால் பல்வேறு இராமாயணம் உள்ளன, உதாரணமாக மற்றொரு இராமாயணத்தில் சீதை ஆனவள் இராவணனுக்கு மகளாவாள். மற்றும் ஒரு இராமாயணத்தில் இராமனும் இராவணனும் நண்பர்கள், அதேபோல் சீதையும் மண்டோதரியும் தோழிகள், அவர்கள் சமைப்பதற்காக விறகு பொறுக்க சென்ற சமயத்தில், கணவன்மார்கள் இருவரும் கூடிக்கொண்டு பேசுகின்றார்கள்.

 இதெல்லாம் அப்படியே நிற்கட்டும்! நாம் 1940 களில் வடநாட்டில் நிகழ்ந்த ஒரு இராமாயண கதாகாலேட்சபத்தை பார்ப்போம். அப்போது நவீனகால பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதுமில்லா இந்தியாவில் புராணங்கள், கோயில் விழாக்கள் முதலானவையே தலைச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாக விளங்கின. அதனால் வருடந்தோறும் நடக்கும் இவ்விழாக்களில் பொதுமக்கள் அனைவருமே கலந்து கொள்வார். இப்படியாக வடநாட்டில் ஒரு கிராமத்தில் இராமாயண நாடகம் நடந்து கொண்டிருந்தது. வருடந்தோறும் நடக்கும அந்நாடகத்தில் வழக்கமான நபர்களே இராமன், சீதை, மற்றும் இராவணன் வேடம் தாங்கி நடிப்பார்கள்.

 அந்த வருடம் இராவணனாக நடிக்கின்ற நபருக்கும், நாடகத்தை நடத்தும் நபருக்கும் ஒரு சிக்கல் எழுந்துவிட்டது. அதாவது தனக்கு கிடைக்கவேண்டிய இனிப்பு, பழம், காய்கறி, நெல் முதலானவற்றை அதிகமாக தர வேண்டும் என்று இராவணன் கேட்டான். 1940 களில் பெரும்பாலான கிராமங்களில் பணத்தின் பயன்பாடு மிகவும் அரிது! ஆனால் நாடகத்தை நடத்தும் அந்த நபர் அதற்கு மறுத்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராவணன் இன்றோடு இந்த இராமாயணக்கதை முடிகின்றது, இத்தோடு இந்த வருடம் மட்டுமல்ல, எந்த வருடத்திலும் இந்த நாடகம் எடுபடாமல் செய்கின்றேன் பார் என்று சபதமிட்டான். நாடகத்தை நடத்துபவனோ பார்த்துக் கொள்கின்றேன் என்று அலட்சியமாக கூறிவிட்டான்.

 பெரும்பாலும் இராமாயண நாடகம் பத்து  நாட்கள் நடக்கும். சுமார் பத்தாயிரம் மக்கள் கூடுவார்கள்தினந்தோறும் விடியவிடிய நடக்கும் அந்நாடகத்தை காண மக்கள் கூடுவார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே பன்முறை அதை கண்டிருப்பதால், சலிப்பினில் அமர்ந்தபடியே உறங்குவர்.

 அன்று சீதையின் சுயம்வர காட்சி! அதாவது அந்த சுயம்வரத்தில் ஜனகன் தந்த வில்லை தூக்கி முறிப்பவர்களே சீதை கையை பற்றி மணமுடிப்பார்கள். அந்த வில்லை தூக்கும் வல்லமை பெற்றவர்கள் இரண்டு பேர்கள் மட்டுமேஒருவன் இராமன் மற்றொருவன் இராவணன்;

இராவணன் வில்லை தூக்கும் தருணத்தில், வானத்து தேவர்கள், “ஓஓ இராவணா உன்னுடைய இலங்கை தீப்பற்றி எரிகின்றது, மக்கள் எல்லோரும் கதறுகின்றனர்”, என்று பொய் சொல்லுவார்கள். உடனே இராவணனும் சுயம்வர நிகழ்வை கைவிட்டுவிட்டு அப்படியே கிளம்பி போய் விடுவான்.

 அப்படியே ஜனகன் ஒரு வில்லை எடுத்து வந்து வைப்பான். வில் என்றால் சாதாரண மூங்கிலில் செய்து வைத்த வில்! இராவணன் அதை எடுக்கப்போகின்றான். அப்போது ஒரு பொடியன், அவன் தான் வானத்து தேவராம், “ஐய்யோ இராவணா, உன்னுடைய இலங்கை பற்றிக்கொண்டு எரிகின்றதே”, என்று குய்யோ முய்யோ என்று கத்துகிறான்.

 இதுவரையில் பார்வையாளராக இருந்த மக்கள் அரைகுறை தூக்கத்தில் இருந்தனர். ஆனால் இராவணனாக நடித்தவன் சொன்ன வசனம் எல்லோரையும் எழுப்பி விட்டு விட்டது. “அடேய் துஷ்டப்பயலே, நீயும் வருடந்தோறும் வந்து இப்பொன்னான கட்டத்தில் இலங்கை தீப்பற்றி எரிகின்றது என்று கூறுவாய், நானும் இக்காட்சியை விட்டு விலகி விடுவேன், ஆனால் இலங்கையில் ஒன்றுமே நடந்திருக்கவில்லை என்று பிற்பாடு உணருவேன். ஆனால் இந்த வருடம் உண்மையிலே இலங்கை பற்றிக்கொண்டு எரியுமானால் எரியட்டும், நான் இந்த வில்லை முறித்து சீதையை மணம் புரிய போகின்றேன், யாருக்காவது தைரியம் இருந்தால் வந்து தடுக்கட்டும்”, என்று கூறிவிட்டு அந்த மூங்கில் வில்லை முறித்து போட்டு விட்டான். மேடையில் இருந்த ஜனகன் இராமன் முதலானோர் ஸ்தம்பித்துப் போயினர்நாடகத்தை நடத்துவோன் ஆவென்று பிளந்த வாயை மூடவில்லை. ஆனால் இராவணனை தடுப்பாரில்லை, ஏனெனில் இராவணனாக நடித்தவன் பலம் பொருந்தியவனாக இருந்தான்.

 இப்போது பார்வையாளர்கள் ஆர்வம் மேலிட நாடகத்தை கண்டு களிக்கின்றார்கள். சிலர் கைதட்டவும் செய்தனர்.

 அடுத்ததாக இராவணன் பார்வையாளர்களை பார்த்து பேசுகின்றான், “மக்களே இம்முறை நானே வில்லை முறித்து சீதையை மணம் கொள்கிறேன், [நிஜமாகவே சீதையாக நடித்த அப்பெண் இராவணனாக நடித்தவனுக்கு மனைவி] எனவே இராமன் அவளை மணம் புரிய முடியாது. மணம் புரியாததால் சீதையை நான் கடத்திக்கொண்டு போக மாட்டேன். எனவே இராமனுக்கும் எனக்கும் போர் நடக்காது. அவரவர் அவரவர் நாட்டில் வீட்டில் நலமாக இருப்பார். எனவே இப்போது மட்டுமல்ல எப்போதுமே இராமாயணம் முடிந்து போனது, இனிமேல் எப்போதுமே இராமாயணம் என்பதே இல்லை, எனவே எல்லோரும் வீட்டிற்கு சென்று நிம்மதியாக உறங்குவீர்களாகுக”.

 பார்வையாளராகிய மக்களின் கைத்தட்டல்கள் அடங்க நெடுநேரமாகியது!

 [ கடவுளாகவே இருந்தாலும் அவருக்கும் காலநேர அளவு உள்ளது. அது முடிந்து போனால் அவரும் முடிந்து போவார் ]  

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...