மரணத்தேவன்
பண்டைய
பாக்தாத் நாட்டின் அரண்மனையில் அந்திப்பொழுதில் தன்னந்தனிமையில் அந்தபுரத்தோட்டத்தில்
வீரமும்தீரமும் மிக்க பேரரசன் உலாவிக் கொண்டிருந்தான்.
அப்போது
கருப்பிலும் கருப்பாக கொடூர தோற்றத்தோடு கருப்புநிற அங்கியில் உருவமொன்று அவன்முன்
உதித்தது. காற்றுகூட நுழைய அனுமதி கேட்கும் இவ்விடத்தில் இவ்வுருவம் எப்படி வந்தது
என்று யோசித்தான். எனினும் அதை புறந்தள்ளிவிட்டு பேரரசனுக்கே உரிய தொனியில் பேசினான்.
“யார் நீ? இங்கு எப்படி வந்தாய்? என்ன காரணம்?”'
கருப்பு
உருவம் பதில் சொல்லலாயிற்று. “நானே அண்டம் நடுங்கும் மரணத்தேவன். நாளை மாலை சரியாக
ஆறு மணிக்கு உன் உயிரை வாங்கப்போகின்றேன். செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக்கொள். ஞாபகமிருக்கட்டும்
நாளை மாலை ஆறு மணிக்கு”, இப்படி சொன்னவுடன் அது மறைந்து போயிற்று.
பேரரசன்
திகைத்துப்போனான். பிறகு முத்துமுத்தாக வியர்வைத்துளிகள் பெருகியோட மந்திரி பிராதனிகளை
வரவழைத்து ஆலோசனை செய்தான்.
“வந்தது காலத்தேவன்தான், அதில் ஐயமில்லை. அதில் இருந்து
எப்படி தப்பிப்பது? சரியாக ஆறுமணி என்றான். ஆறு மணியாகி ஒருநிமிடம் ஆகிவிட்டாலும் போதும்.
பிறகு என்றுமே மரணபயம் இன்றி வாழலாம். எனவே தப்பிக்கும் வழியைக் கூறுங்கள்”.
எல்லோரும்
ஆளுக்கு ஒரு வழியைக் கூறினார்கள். ஆனால் எதுவுமே சரிவருவதாக தோன்றவில்லை. அப்போது இருப்பவர்களில்
வயதான மந்திரி ஒருவன் கூறினான். “வல்லமை பொருந்திய குதிரையொன்றில் ஏறி இந்நாட்டை விட்டு
வேறெங்காவது தப்பிச் சென்று விடுங்கள், பிறகு மரணத்தேவன் இங்கே வந்து பார்த்து ஏமாந்து
விடுவான். அதற்குள் நேரமானது ஆறுமணியை தாண்டிவிடும். பிறகு நீங்கள் அச்சப்படாமல் தைரியமாக
இருக்கலாம்”.
பேரரசனுக்கு
இதுவே தலைச்சிறந்த யோசனையாக பட்டது. உடனே அவன் வல்லமை பொருந்திய குதிரையொன்றில் ஏறி
நாட்டை விட்டு வெளியேறினான். அப்போதும் நிற்காமல்
உண்ணாமல் உறங்காமல் பயணத்தை தொடர்ந்து மறுநாள் அந்திசாயும் நேரத்தில் ஒரு பெரிய
மரமருகே வந்து இறங்கி மரத்தின் வேரில் அமர்ந்தான்.
அச்சமயத்தில்
மரத்தின் மேலிருந்து சிரிக்கும் சப்தம் கேட்கவே திடுக்கிட்ட பேரரசன் அண்ணாந்து பார்த்தான்.
அங்கே கிளையில் மரணத்தேவன் அமர்ந்திருந்தான்.
“என்ன மானுடனே, உன் உயிர் இவ்விடத்தில் தான் போகப்போகிறது
என நீ பிறக்கும்போதே என்னால் எழுதப்பட்ட விதி! நேரம் இப்போது சரியாக ஐந்து ஐம்பத்தெட்டு!
நீ மனதை மாற்றிக்கொண்டு அரண்மனையிலே தங்கி விடுவாயோ, அல்லது குதிரைக்கு காலொடிந்து
போனதோ என்றெல்லாம் பயந்தேன்! இருப்பினும் நீ சரியான சமயத்திற்கு வந்து சேர்ந்தாய்,சரியாக
மணி ஆறு, வா போகலாம்”.
போதனை;
இறப்பைக்கண்டு அஞ்சவே தேவையில்லை. பிரபஞ்சத்தில் அதுவும் ஒரு மாறாத விதி.
No comments:
Post a Comment