Saturday, October 21, 2023

[ 8 ] வரலாற்றின் அபத்தம்

 

வரலாற்றின் அபத்தம்

 

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இங்கிலாந்து நாட்டில் ஒரு வரலாற்று அறிஞர் வாழ்ந்து வந்தார். பெரியதொரு மாளிகையில் வசித்த அவருக்கு அம்மாளிகை முழுவதும் புத்தகங்கள் புத்தகங்கள். ஆனால் அவரிருந்த அறையில் மட்டும் அலமாரிகளில் பரண்களில் கட்டிலுக்கடியில் எல்லாம் கையெழுத்துப்பிரதிகள். எல்லாம் அவர் எழுதியது ஆகும். உலகின் வரலாற்றை அதன் தொடக்கம் முதலே துவங்கி இன்றுவரையில் எழுதி முடிப்பது என அவருடைய தீராத ஆவலாக இருந்து வந்தது. வரலாறு அரசியல் விஞ்ஞானம் தத்துவம் கலைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய இதுவரை யாருமே எழுதாத வண்ணம் உலக வரலாறை எழுதி முடிப்பது என திண்ணமாக, நாள்முழுக்க எழுதிக்கொண்டிருப்பார்

 

அன்றும் அப்படி எழுதிக்கொண்டிருந்தார். அப்போது மாளிகைக்கு வெளியே "டுமீல்" என்ற துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டது. அறிஞர் எழுதுவதை விட்டுவிட்டு வெளியே ஓடிச்சென்று பார்த்தார்.

 

சாலையில் இரத்தம் வழிய ஒருவன் விழுந்துக்கிடந்தான். அவனை சுற்றி ஆண்களும் பெண்களும் கிழவர்களும் கிழவியர்களும் சிறுவர்களும் சிறுமியும் பிச்சைக்காரர்களும் குதிரைவண்டி ஓட்டுபவர்களும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

துப்பாக்கி வெடித்த ஓசை கேட்டு ஒருநிமிடம் கூட ஆகியிருக்காது. எனவே அவன் மரணத்திற்கு காரணம் யாரென தெரியும், இந்த கூட்டத்திற்கும் தெரியும் என்று அனுமானித்த அவர், “கீழே விழுந்து கிடப்பது யார்? யார் இவரை சுட்டது? எதற்காக என்று தெரியுமா?” என்று கேள்விகளை அடுக்கினார்.

 

முதியவர் ஒருவர் பதிலளித்தார். “இவர் யாரென்று தெரியாது. ஆனால் கோச் வண்டியிலிருந்த ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அதோ அந்த வழியில் படுவேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு மறைவதை நான் என்னிரு கண்களால் பார்த்தேன்” இப்படி சொன்ன அந்த முதியவர் கைகளை முன்பக்கம் நீட்டிக்கொண்டே பார்வையற்றவராக தட்டுதடுமாறி அவ்விடத்தில் இருந்து நகர்ந்தார்.

 

இவருக்கு கண்பார்வை சற்று மந்தம் அதனால் இவர் சொன்னதை ஏற்க இயலாது என்று எண்ணமிட்ட அறிஞர் வேறொரு பையனிடம் கேட்டார்.

 

 “அந்த ஆள் நடந்து வரும்போது கீழே தவறிவிழுந்து விட்டான். மற்றபடி யாரும் அவனை சுடவில்லை”.

 

இளம்பெண்னொருத்தி அவனை படுகேவலமாக பார்த்தப்படி, “இல்லை இவன் பொய் சொல்கிறான், அந்த ஆள் கோச் வண்டியில் வரும்போது வண்டியிலிருந்த வேறொருவன் இவனை துப்பாக்கியில் சுட்டுவீழ்த்தி இங்கே தள்ளிவிட்டான்”, என்று ஆணித்தரமாக சொன்னாள்.

 

அறிஞருக்கு தலை சுழன்றது. "என்ன இது சம்பவம் நடந்து ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. எனவே யாரேனும் ஒருவர் இதை, இவனை இந்த கதிக்கு ஆக்கியது யாரென்று அறிந்திருக்க வேண்டும்"

 

அவரின் பணக்கார உடையை பார்த்து நடுத்தர மனிதன் ஒருவன் அவர் முன் வந்து நின்றான்.  “ஐயா இவனை நான்கு பேர்கள் தூக்கிவந்து இவ்விடத்தில் போட்டுவிட்டு போய் விட்டனர். ஆனால் நடந்தவற்றை நான் பார்க்கவில்லை. வேறு ஒருவர் சொன்னதை தான் நான் சொன்னேன்".

 

அறிஞர் திடீரென தன் மண்டைக்குள் உதித்த வேறொரு சிந்தனையால் ஸ்தம்பித்துப் போனார். ஐந்து நிமிடங்களுக்கு முன் ஒரு சம்பவம். அதைப்பற்றி ஆளுக்கு ஆள் வேறுவேறு வகையாக கூறுகின்றனர். இதுவே இப்படிஎன்றால் பிறகு ஆயிரக்கணக்கான வருஷ உலக வரலாற்றை எப்படி எழுதுவது?. அது சம்பந்தமாக எத்தனை எத்தனை கருத்துக்கள் இருக்குமோ? எத்துணை அளவுக்கு நேர்மையாக எழுதினாலும் நான் எழுதுவது பொய்யே, பொய்யன்றி வேறில்லை.

 

இப்படி எண்ணமிட்ட அந்த அறிஞர் வீடு திரும்பி தான் எழுதியவற்றை தீயிலிட ஆரம்பித்தார்.

 

போதனை: கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் தீர விசாரிப்பதே மெய் என்றாலும் ஒருவகையில் அந்த கூற்றும் பொய்யே!

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...