மூன்று ஞானிகள்
இரஷ்யநாட்டில் புகழ்பெற்ற கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஒருவர் இருந்தார். அவர் பேசுகின்ற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டமாக கூடுவார்கள். இதனால் அவருக்கு செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு இவைகளோடு தலைக்குமேலே கர்வமும் கூடிநின்றது.
ஒருநாள் தேவாலயத்தில் பிரசங்கம் செய்யும் போது வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குறைவாக இருப்பதைக் கண்டார். இருந்தாலும்
அவர் அதை சட்டை செய்யவில்லை. மறுவாரம் அந்த கூட்டத்திலும் பாதிபேர் வராமலிருப்பதை கண்டு வியப்பும் கவலையும் ஒருங்கே கொண்டு காரணத்தை விசாரித்தார்.
ஒருவர் காரணத்தை விலாவரியாக சொன்னார். அதாவது தூரத்தில் இருக்கும் ஒரு ஏரியின் நடுவே மூன்று ஞானிகள் வந்து தங்கியிருக்கின்றராம். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதுடன் மக்களுக்கு வேண்டும் வரங்களை வழங்குகின்றனராம். அத்தோடு காணிக்கையாக எதை கொடுத்தாலும் வாங்கிக் கொள்கின்றனராம்.
ஆர்ச் பிஷப்புக்கு கடுப்பும் வெறுப்பும் கோபமும் சோகமும் ஒருங்கே வந்தது. இந்த இரஷ்ய நாட்டிற்கே நாம்தான் ஆர்ச் பிஷப், எனவே கடவுளின் அருள் யாருக்கு வாய்த்தாலும் அது நானன்றி வேறு யாருக்கும் தெரியாதே! நாம்தானே அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். யாரிவர்கள்? எனக்குத்தெரியாமல் கடவுளின் அருளைப் பெற்றவர்கள்? சரி பார்த்து விடுகிறேன்.
இப்படியெல்லாம் நினைத்துக்கொண்ட ஆர்ச்பிஷப் மறுநாளே பயணம் மேற்கொண்டு அந்த ஏரிக்கரையை அடைந்து ஒரு படகை வாடகை அமர்த்திக்கொண்டு ஏரியின் மத்திக்கு விரைந்தார். சுமார் அரைமணிநேரம் பிடித்து அந்த திட்டை அடைந்தார். பக்தர்கள் குழுமம் ஏதுமில்லை. மூன்றே மூன்று நபர்கள் தான் அங்கு அமர்ந்து கொண்டிருந்தனர். மூவரையும் பார்த்தால் கல்வியறிவற்றவர்களாக வறியவர்களாக தோன்றியது.
பிஷப் அவர்களை நோக்கிச் சென்று, “இங்கே அந்த மூன்று சாமியார்கள் யாரோ? நான் தான் ஆர்ச் பிஷப் வந்திருக்கிறேன். ம்ம் அவர்கள் எங்கே? உடனடியாக வரச்சொல்லுங்கள்”, என்று கூறினார்.
மூன்றுபேரும் பதறிபோய் எழுந்துக்கொண்டே, “அந்த சாமியார்கள் என்பவர் நாங்கள் தான் ஐயாவே, சாமியார்கள் என்ற பெயரையும் நாங்கள் வைத்துக்கொண்டதல்ல, அது மக்கள் அழைப்பது, தங்களுக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயாவே”, என்று மூவரும் வணங்கி நின்றனர்.
ஆர்ச்பிஷப்புக்கு அப்போதுதான் ஒருவித மனத்தெளிவு பிறந்தது. “ம்ம் சரிசரி நீங்கள் தான் அந்த சாமியார்களா? சரி கடவுளை வணங்குவீர்களா? எப்படி வணங்குவீர்கள்? என்ன சொல்லி பிரார்த்தனை செய்வீர்கள்?”
மூவருக்கும் ஒருவிதமான தர்மசங்கடம் பிறந்தது. அதில் ஒருவன் தயங்கியபடியே சொன்னான். “நாங்கள் மூவர், கடவுளே நீங்கள் மூவர், அருள் செய்யுங்கள் ஆண்டவரே”, இப்படித்தான் பிரார்த்தனை செய்வோம் என்று சொன்னான்.
பிறந்ததில் இருந்தே சிரிப்பென்பதை அறியாத ஆர்ச்பிஷப் விழுந்து விழுந்து சிரிக்கலானார். “இதுவா பிரார்த்தனை? நீங்கள் ஒன்றுமே அறியவில்லை போலுள்ளதே! இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்யக்கூடாது. மாறாக மண்டியிட்டமர்ந்து நான் சொல்வதை காதுகொடுத்து கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு, கிறிஸ்துவ தேவாலயங்களில் கடைப்பிடிக்கப்படும் அந்த நீளமான பிரார்த்தனையை சொன்னார். பிரார்த்தனை வெகு கடினமாக இருந்தது. இருப்பினும் சாமியார்கள் அதை சொல்லி பார்த்தனர்.
அதில் ஒருவன் மீண்டும் ஒரு முறை பிரார்த்தனையை கூறும்படி கேட்டுக்கொண்டான். ஆர்ச் பிஷப்பும் சொன்னார். மற்ற ஒருவன் அந்த கடைசி பகுதியை மட்டும்
சொல்ல சொன்னான். பிஷப்பும் கூறினார். பிறகு ஒருவழியாக மூன்று பேரும் பிரார்த்தனையை கற்று கொண்டனர்.
ஆர்ச் பிஷப்பிற்கு ஆணவம் தலைக்கேறி விட்டது.`சாமியார்களாம் சாமியார்கள்! கிறிஸ்துவத்தின் அடிப்படை விதிகள் கூட தெரியவில்லை, இவர்களிடம் போய் மக்கள் எதற்காக குவிய வேண்டும் என்று யோசித்துக்கொண்டே படகில் ஏறி பயணப்பட்டார்.இன்னும் சிறிதுதூரம்தான் கரை வந்துவிடும் என்று நினைத்த போது, தூரத்தில் ஏதோ ஆவியாக ஒன்று ஓடிவருவதை கண்டு பயந்துபோனார். பின்னர் தான் தெரிந்தது, வருவது அந்த மூன்று சாமியார்களும் என்று! மூவரும் எவ்வித துணையுமின்றி தண்ணீர் மேல் அப்படியே ஓடிவருவதைக் கண்ட ஆர்ச்பிஷப்பிற்கு கைகால்கள் எல்லாம் நடுங்கியது.
மூவரும் படகை நெருங்கி வந்து, “ஐயாவே எங்களுக்கு அந்த பிரார்த்தனையை இன்னொரு முறை சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்”, என்று சொல்லினர்.
ஆர்ச் பிஷப் படகிலிருந்து எழுந்து கூறினார். “சாமியார்களே உங்களின் பழைய பிரார்த்தனையே போதுமானது. அதையே சொல்லி வாருங்கள், உங்களுக்கு கடவுள் அருள் நிச்சயமாக உள்ளது, யாருக்கும் நீங்கள் பணியத்தேவையில்லை, இப்படியே இதேபோல் இருந்து
வாருங்கள், நான்
செல்கிறேன்” என்று கூறிவிட்டு தலையை குனிந்துக் கொண்டார்.
போதனை;
வாழ்க்கையை நீங்களே தேர்தெடுங்கள், அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment