நீயே அவன்.
குளிர்பொருந்திய திபெத் நாட்டின் மலைகளில் ஒன்றில் ஒரு புத்த மடாலயம் இருந்தது. அந்த மடம் புகழ்பெற்றிருந்தாலும் கூடவே ஏழ்மையும் அதைத் தொற்றிக்கொண்டிருந்தது. சுமார் நூறுபேர் அதில் மாணவர்களாகவும் சிஷ்யர்களாகவும் இருந்தனர். மடத்தின் தலைவருக்கு வயதாகிக்கொண்டே வர ஒரு நாள் படுத்தபடுக்கையாகிவிட்டார்.
அப்போது ஒரு நாள் அவர், தர்மா என்ற சீடனை அழைத்து அவனிடம், உடனே பக்கத்து மலையில் உள்ள மடத்துக்குச் சென்று அதன் தலைவரிடம், உடனடியாக நம் மடத்துக்கு ஒரு தலைவனாக இருக்கத் தகுதியுள்ள ஒருவரை அனுப்பும்படி கேட்பாயாக! என்றுகூறி, கடிதம் ஒன்றையும் அவனிடத்தில் தந்தார்.
சீடனும் உடனே புறப்பட்டான். ஆனால் பெயருக்குத்தான் பக்கத்து மலை. அடையவேண்டிய தூரமோ எண்ணற்ற இடையூறுகளைத் தந்தது. அடர்ந்த காடு, ஆழமுள்ள ஆறு, செங்குத்தான பாறைகள், அதலபாதாளங்கள் இவற்றையெல்லாம் கடந்துதான் அம்மடத்தை அடைய வேண்டும். ஒருவார காலத்தில் அவன் சோர்வின்றிக் கழித்து இறுதியில், அந்த மடத்தையடைந்து அதன் தலைவரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்து விஷயத்தைச் சொன்னான்.
அதன் தலைவர் அவனையே பார்த்தார். கடிதத்தைப் படித்தார். பின், யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, அவர் நூறு மாணவர்களை அழைத்துச் செல்லும்படி அவனிடம் பணித்தார்.
தர்மா என்ற அந்த இளம்சீடன் அவருடைய பேச்சைக் கேட்டு திகைத்துப் போனான். நாம் கேட்டதோ ஒரேயொரு நபர். ஆனால் இவரோ நூறு நபர்களை அழைத்துப்போகச் சொல்கிறார். ஏற்கனவே, நம்முடைய மடத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதில், இவர்களைவேறு அழைத்துக்கொண்டு போனால் நிலைமை என்னவாகும்?
இருப்பினும், தர்மா மெளனமாக அவர்களை அழைத்துக்கொண்டு மடமிருந்த மலையைவிட்டு கீழிறங்கினான். இப்படியாக, அவர்கள் ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். வந்தவர்களில் ஐம்பதுபேர் அவனிடம் `இக்கிராமத்தில்தான் நாங்கள் பிறந்தோம், வளர்ந்தோம். எங்களின் தாய், தந்தையர் நினைவு வந்துவிட்டது. எனவே, நாங்கள் இங்கே ஒருமாத காலம் தங்கியிருந்துவிட்டு பிறகு வருகிறோம்' எனச் சொல்லிவிட்டு அவர்கள், தர்மாவின் மறுமொழியைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டனர்.
தர்மாவுக்கு படுபயங்கர கோபம். அதேநேரத்தில், கொள்ளை சந்தோஷமும்கூட. வந்த வேலையைப் பார்க்காமல் பெற்றோர்களிடம் போய்விட்டார்களே! என்று கோபம். ஐம்பதுபேருக்கு உணவளிக்கும் விஷயத்தில் தன் மடம் தப்பித்துவிட்டதே என்ற சந்தோஷம்.
மீதமிருந்த ஐம்பதுபேரை அழைத்துக்கொண்டு தர்மா மேலே நடந்தான். போகும்வழியில் அவர்கள் மதத்துக்கு எதிரான கிளையைச்சேர்ந்த மற்றொரு கூட்டம் எதிர்ப்பட்டது. உடனே பத்துப்பேர் அந்தக் கூட்டத்தாரிடம் வாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதைக்கு வாத, பிரதிவாதம் முடிவதாகத் தோன்றவில்லை. ஆகவே, அவர்களை விட்டுவிட்டு மீதமிருந்த நாற்பது நபர்களோடு தர்மா புறப்பட்டான்.
வழியில் ஆற்றங்கரையருகே ஒரு விவசாயி இறக்கும்தறுவாயில் கிடந்தான். அவனுடைய பேரழகுமிக்க ஐந்து இளம் மகள்கள் அவனைச் சுற்றிநின்று அழுதுகொண்டிருந்தனர். நாற்பதுபேரில் ஐந்துபேருக்கு அவர்களைக் கண்டமாத்திரத்தில் காதல் உண்டானது. எனவே, அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். அதையும் கடந்துபோகையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட அதில் சிக்கி, சிலர் மாண்டனர். இப்படியாக தர்மா, துணை ஏதுமின்றி மடத்தை தனிமையில் அடைந்தான்.
மடத்தின் தலைவர் தர்மாவைக் கண்டதும் புன்சிரிப்புடன் வரவேற்றார். `என்ன தர்மா, போன காரியம் என்னவாயிற்று? எங்கே அந்தத் தலைவன்?’ என்று வினவினார்.
தர்மா கண்ணீர்த்துளிகள் சிந்த, குரல் தழுதழுத்தபடி நடந்த யாவற்றையும் சொன்னான்.
"அதனாலென்ன... நீயாவது திரும்பி வந்தாயே! அந்தமட்டிலும் போதும். வா... வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்!" என்றார்.
No comments:
Post a Comment