Wednesday, October 18, 2023

[ 5] ஞானம் வந்த நாய்.

 ஞானம் வந்த நாய்

 

கிராமமொன்றில் ஆண் நாயொன்று வசித்து வந்தது. கருப்பு நிறமும் வளப்பமான உடலையும் பெற்ற அந்த நாய்க்கு உடல் பலமும் ஆணவமும் ஏராளமாக இருந்தது . இதனால் அந்த நாயைக்கண்டால் பிற நாய்கள் கால்களுக்கிடையே வாலை நுழைத்துக்கொண்டோடும். கருநிற நாய்க்கு இதைப்பார்ப்பதில் மிகுந்த ஆனந்தம் . பிற பெண் நாய்களை கண்டவுடன் மேலேறி புணரும். குப்பைதொட்டிகள் எங்கெங்கிலும் அதன் ஆளுமைதான். இதைக்கண்டு பிற நாய்கள் எரிச்சலுற்றாலும் அவைகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்படியே நாட்கள் போனது. நாயின் அடாவடித்தனம் வளர்ந்தது. இதனால் அந்த நாய்க்கு மனிதர்களை கடித்துபார்க்கும் ஆசை பிறக்கவே, அது ஒன்றிரண்டு மனிதர்களை கடிக்கவும் செய்தது. 


மனிதர்கள்! சும்மா விடுவார்களா அவர்கள்! ஒருநாள் சரியாக ஓரிடத்தில் மாட்டிக்கொண்ட அந்த நாயை நையப்புடைத்தனர். நாய்க்கு உடலெங்கும் காயங்கள். தவிர அதன் மனதிலும் பேரதிர்ச்சி. என்னடா இது! நாம்தான் உலகிலேயே சக்திமிக்கவன் என்று நினைத்தோம், இப்போது என்னவென்றால் நம்மையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்களே?

 

இப்படியெல்லாம் பலப்பலவாறு உடல் வலியையும் மீறி யோசித்துக் கொண்டிருந்த அந்த கருப்பு நாய்க்கு திடீரென ஞானம் பிறந்தது. ஞானமென்றால் அதுதான் ஞானம். யார் வேண்டுமானாலும் ஞானம் பெற்றதாக சொல்லிக்கொள்ளலாம். யாரும் அதை கேட்க மாட்டார்கள். என்ன ஆகபோகின்றது. ஒரேஒரு விஷயம். ஞானமடைந்தவன் என்று சொல்லிக்கொண்டாலும் அடுத்தவர் பேச்சிலோ அல்லது வாழ்க்கையிலோ குறுக்கிட்டால் அதோ கதிதான். இந்த விஷயத்தையும் அந்த நாய் தெரிந்து வைத்திருந்தது. எல்லாம் ஞானம் போதித்த உண்மை!

 

அதேசமயம் மற்ற நாய்கள் மத்தியில் இந்த நாய் உதைப்பட்ட விவகாரம் தெரியவந்தது. எல்லா நாய்களும் ஒன்றுகூடி கருநிற நாயை பார்க்க வந்தன. அவைகளுக்கு ஒரே சந்தோஷம். எனினும் அதை வெளிக்காட்டாமல் நலம் விசாரித்தன.

 

இந்த நாய் நடக்கக்கூட முடியாமல் ஒரு மரத்தடியில் படுத்தப்படி இருந்து மற்ற நாய்களை பார்த்தது. நாயாக இருந்தாலும் ஞானமடைந்த நாய் அல்லவா?அதனால் மேற்கொண்டு பேச ஆரம்பித்தது.

 

 “என்னருமை ப்ரிய நாய்மகன்களே மகள்களே உங்களுக்கு என் இனிய வணக்கம். நான் மனிதர்களிடம் உதைவாங்கிய விவகாரம் நீங்கள் அறிந்ததுதான். அதைப்பற்றி நான் வெட்கமோ வேதனையோ படவில்லை. அதன் மூலம் கடவுள் எனக்கு ஞானம் அளித்தார். சதாசர்வமும் உதைப்பட்டு இன்னல்பட்டு உயிர்வாழும் உங்களுக்கெல்லாம் நல்வாழ்வு தர எனக்கு ஆணையிட்டுள்ளார்”.

 

இது கேட்டு மற்ற நாய்கள் சற்று குழம்பினாலும்  “நல்வாழ்வு”, என்ற சொல்லானது அவற்றின் ஐயங்களை விலக்கிவிட்டது.

 

 “நம்மை எதற்காக மனிதர்கள் தாக்க வேண்டும். காரணமின்றி கட்டையாலும் கல்லாலும் ஏன் அடிக்க வேண்டும். யோசித்துப் பார்த்திருக்கின்றீரா? வேறு ஒரு காரணமுமில்லை. குரைப்பது. நாம் குரைப்பது. காரணமேயின்றி நாம் குரைப்பதால் மனிதர்கள் நம்மை தாக்குகிறார்கள். ஆக குரைப்பதை நிறுத்திவிட்டால் நாம் நல்வாழ்வு வாழலாம். சரிதானே சிஷ்யர்களே”.

 

எல்லா நாயும் இதுகேட்டு தமக்குள் கூடிகூடி பேசிக்கொண்டன. பின் குரைப்பதை நிறுத்துவது என சபதம் செய்தன. பிறகு அங்கிருந்து போக தலைப்பட்டன.

 

திடீரென ஒரு நாய் குரைத்தது. அதைக்கேட்டு மற்ற நாய் பின் பிறிதொரு நாய்..

 

 “பாருங்கள் இப்போது தான் சொன்னேன் அதற்குள் இப்படியாக வேண்டுமா? எழுந்திருக்க முடியாத கருநிற நாய் கேட்டது. உடனே மற்ற நாய்கள் வாயை மூடிக்கொண்டு அங்கிருந்து போயின.

 

நாளடைவில் கருநிற நாய்க்கு உடல்நிலை சரியாக  பகலில் அல்லாமல் இரவுகளில் மட்டும் ஊர்வலம் சென்று நாய்களுக்கு புத்திமதி சொல்லிவந்தது. ஆனாலும் பலன் என்னமோ தற்காலிகம் தான். இந்த நாய் போதனைகளை புரிய கேட்கின்ற நாய்கள் அந்த நிமிடத்திற்கு மட்டும் குரைக்காது. அடுத்த நிமிடத்தில் குரைக்கும்.

 

இப்படியாக நாட்கள் நகர அடுத்த பெளர்ணமி தினமும் வந்தது . மற்ற நாய்கள் கூடிப்பேசிக்கொண்டன. “இதோ போன மாதம் இதே தினத்தில் தான் நம் தலைவன் ஞானமடைந்த நாள். இந்த நாளிலாவது நாம் நம் தலைவன் சொல்கின்றபடி நடப்போம்”, இப்படி சபதமிட்ட நாய்கள் எல்லாம் வீடுகளின் இடுக்குகளிலும் இருண்ட மூலைகளிலும் சென்று பதுங்கிக்கொண்டன.

 

கருநிற நாய் வழக்கம் போல் மற்ற நாய்களை தேடி அலைந்தது. ஆனால் ஒரு நாய் கூட தென்படவில்லை. என்ன இது ஒரு நாயையும் கூட காணோம்! குரைப்பொலிகளும் கேட்கவில்லை? என்று ஆச்சரியத்துடன் சுற்றிவந்த கருநிற நாய் சட்டென்று வயல்ஓரத்தில் அமர்ந்து வானத்தைப் பார்த்தது.

 

வானத்தில் முழுநிலவு பரிபூரணமாக தென்பட்டு ஒளிவீசிக்கொண்டிருந்தது. அதைப்பார்க்க பார்க்க கருநிற நாய்க்கு இனம் புரியாத இன்பம் பிறந்தது.உடனே அது தன்னை மறந்து ஓலமிட்டு சப்தமாக குரைக்க ஆரம்பித்தது. இரவின் தனிமையில் அதன் குரைப்பொலி கிராமம் முழுவதும் கேட்க ஆரம்பிக்க மற்றெல்லா நாய்களும் சபதத்தை மறந்து வெளியே வந்து குரைக்க ஆரம்பித்தன.

 

கருநிற நாய் குரைப்பதை நிறுத்திவிட்டு போதனை செய்ய ஓடியது.

 

போதனை: நம்முடைய இயற்கையான பசி, தூக்கம் முதலானவைகளை நாம் என்றுமே மறுதலிக்கக்கூடாது. இவற்றை மறக்கவேண்டும் என்று யாராவது உங்களுக்கு உபதேசம் செய்தால், முதலில் அவர்களை நீங்கள் மறுக்கவேண்டும்.

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...