Friday, October 27, 2023

[ 14 ] மரபணு

 

மரபணு.

 

”அம்மா அம்மா”, என்று முந்தானையை பிடித்து இழுத்தான் லதாவுடைய பத்து வயதான மகன் இளங்கோவன். “என்ன?” என்று இட்லிக்கு மாவரைத்தப்படி லதா கேட்டாள். ஐய்யோ நாளை பரீட்சை தொடங்குகிறது, இன்னும் நான் தயாராகவில்லையே, என்று மனதுக்குள் குமைந்து கொண்டாள். அவள் எம்.எஸ்.சி உயிரியல் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவள், சடுதியில் புகழ்பெற்றிருந்த தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பத்தாம் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுக்கிறாள். இப்போது இளங்கோவனின் புன்சிரித்த முகமும் பிஞ்சு உதடுகளிலிருந்த புறப்பட்ட வார்த்தைகளும் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

 

“அம்மாவுக்கு என்ன இளங்கோ” என்று இட்லி மாவை கைத்துண்டால் துடைத்தப்படி வினவினாள்.

 

“இல்லை, அப்பா வந்து நான் பாட்டியை உரித்து வைத்தப்படி இருக்கிறேனாம், நான் பாட்டி சொல்கிற வார்த்தைகளையும் சைகைகளையும் அப்படியே செய்கிறேனாம், எனவே நான் பாட்டியின் மறு அம்சமாம், அதாவது செத்துப்போன பாட்டி என் உருவில் பிறந்திருக்கிறளாம், அவர் சொல்வது உண்மையா?”

 

லதா தன்னுடைய மாமியாரை பற்றி யோசித்தாள். அவர் சற்று பிடிவாதமாக இருந்தாலும் அடிப்படையில் நல்ல மாமியார், தனக்கு மகள் இருந்தால் எப்படி பார்த்துக் கொள்வாரோ அப்படியே தன்னையும் பார்த்துக் கொண்டார், ஆமாம், அவளுடைய உருவமும் குணங்களும் நடையும் அப்படியே இளங்கோவனிடம் இருக்கிறது, “ஆமாம் அப்பா சொன்னது சரிதான், நீ அப்படியே பாட்டியின் ஜாடைதான்”.

 

 “சரி சரி. அப்போது அவருடைய குணநலன்களும் என்னிடமிருக்கிறது சரிதானே”

 

“ஆமாம், அதிலென்ன ஐயம்?”

 

 “அப்போது பாட்டி மறுபிறவி எடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா?”

 

லதா யோசித்தாள், “ம்ம்ம், அப்படியும் ஒருவகையில் கூறலாம்தான்”

 

 “நீதான் உயிரியல் படித்தவராயிற்றே, இன்னும் விளக்கமாக சொன்னால் ஆகாதோ?”

 

லதா சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். இளங்கோவனை தன்னருகினில் அமர்த்திக்கொண்டு பேசத்தொடங்கினாள்.

 

“ இளங்கோவன், நமக்கு எல்லோருக்குமே தலை கண் காது மூக்கு இதயம் நுரையீரல் சிறுநீரகங்கள் முதலானவை உள்ளன அல்லவா? இந்த உறுப்புகள் யாவுமே அதாவது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரைக்கும் ஆயிரக்கணக்கான செல்களால் ஆனவை, அதாவது இந்த செல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்ததுவே நம் கண்கள், காதுகள் முதலானவை”

 

இளங்கோவன் கண்களை அகலவிரித்து கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“இந்த செல்கள் யாவுமே கணக்கு வைத்தாற்போல் அழிவதும் மறுபடியும் புது  செல்கள் உருவாவதும் அன்றாடம்  நிகழ்கின்றன. ஆயிரக்கணக்கான கோடி செல்கள் ஒவ்வொன்றிலும் டி என் ஏ என்ற மரபணு உள்ளது. ஏணிபோன்ற வடிவமைப்பில் உள்ள இதுவே நம்முடைய எண்ணங்கள் எதிர்காலத்திட்டங்கள் மற்றும் நாம் எப்படியாக  இருக்கிறோம், நம்முடைய உடல் அமைப்புகள் யாவற்றின் சிக்கலான வரைபடங்கள் இந்த மரபணுக்களில் தான் உள்ளன. புரிகிறதா?”

 

“ஓஓ நன்றாக புரிகிறது”

 

“கைவிரல் ரேகைபோல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான பிரத்யேகமான அமைப்புகள் உள்ளன. இந்த ஒவ்வொரு மரபணுவிலும்தான் நம்முடைய எண்ணங்கள் மற்றும் ஆழ்மனங்கள் உள்ளன”

 

“ஆஹா மனம் என்பது இங்கேதான் உள்ளதா?”

 

“ஆமாம். சரியாக சொல்லப்போனால் மனம் அல்ல, மாறாக மனங்கள். ஆக இந்த கோடிக்கணக்கான செல்கள் அவற்றின் உள்ளே மூன்று மீட்டர் அளவிலிருக்கும் மரபணுக்கள், இவற்றின் உள்ளே தான் நம்முடைய வாழ்க்கை இலட்சியங்கள், நாம் பணக்காரர் ஆவதா? ஏழ்மையிலே வருந்தி கிடப்பதா? நம்முடைய தாத்தா பாட்டி மற்றும் அவர்களின் முன்னோர் நினைத்த நினைப்புகள் யாவுமே இவற்றில் அழுத்தமாக பதிந்துக்கிடக்கின்றன. என்ன புரிகிறதா?”

 

“புரிகிறது, புரிந்தது”.

 

” நீ கேட்டாயே மறுபிறவி என்பது உள்ளதா என்று? ஒருவகையில் அது உள்ளது என்பேன். நம்முடைய முன்னோர்களின் ஆசைகள் எண்ணங்கள் முதலானவற்றை சுமந்து கொண்டு ஒருவன் பிறக்கிறான் என்றால் அது மறுபிறவிதானே? ஆனால் நம்முடைய வாழ்க்கை மேம்படுவதற்கு அவர்களின் எண்ணங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது அல்லவா?”

 

“ அப்போது அவற்றை கண்டுபிடித்து தேவையில்லாதவற்றை களைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் அம்மா?”

 

“இன்னொருநாள் சொல்கிறேன்”.

Thursday, October 26, 2023

[ 13 ] தண்ணீரே சிறந்த மருந்து.

 

தண்ணீரே சிறந்த மருந்து

 

லா வோ சூ பழங்கால சீனதேசத்தின் மாபெரும் அறிவாளி, ஞானி, தெய்வீக யோகி. அவரை எப்படி வேண்டுமானாலும் போற்றலாம். சிறந்த அரசியல் வித்தகர் என்று பெயர் பெற்றிருந்த கன்பூசியஸே அவரிடம் வாதம் செய்யாமல் ஓடிவந்து விட்டதாகவும் பேச்சு உண்டு. அவருக்கு பணிவிடை செய்ய ஏராளமான சீடர்கள் இருந்தனர்.

 

ஒருநாள் காலை தூங்கி எழுந்தது முதல் லா வோட் சூ புருவங்கள் முடிச்சுப்பட ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இப்பிடியே நெடுநேரம் போனது.சீ டர்களுக்கு பயம்; கேள்வி கேட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும் என்று பேசாமல் தம் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். இருந்தும் ஒருமணி நேரம் போனபின், பொறுக்கமுடியா சீடன் ஒருவன்,  ஐயா எழுந்திருந்து பல் தேயுங்கள் குளியுங்கள் பிற்பாடு உணவு உண்ணலாம்”, என்று கூறினான்.

 

லா வோட் சூ மெல்ல வாயை திறந்தார். “இல்லை எனக்கு ஒரு குழப்பம்”.

 

என்னது? லா வோட் சூ வுக்கே குழப்பமா? என்ன குழப்பம்? சீடர்கள் குழம்பி நின்றனர்.

 

 நேற்றிரவு நான் ஒரு பட்டாம்பூச்சியாக மாறுவதாக கனவு கண்டேன். அதிலிருந்து தான் ஒரே குழப்பம்”.

 

 இதிலென்ன குழப்பம்?”

 

 இல்லை. இப்போது லா வோட் சூ தான் பேசுவதா? அல்லது பட்டாம்பூச்சி ஒன்று லா வோட் சூவாக மாறிவிட்டதாக கனவு கண்டு அந்த கனவு இன்னும் தொடருகிறதா? இப்போது நான் யார்? லா வோட் சூவா?அல்லது பட்டாம்பூச்சியா?”

 

சீடர்களுக்கு குழப்பமோ குழப்பம். என்ன பதில் சொன்னாலும் அல்லது கேள்வி கேட்டாலும் மறுமொழி இன்னும் குழப்பத்தை அதிகரிக்கும். ஏனெனில் அவர் மகாசிறப்பு வாய்ந்த லா வோட் சூ!

 

திடீரென்று இளம் சீடன் ஒருவன் வாளி நிறைய குளிர்ந்த நீரை அவர் தலைமீது கொட்டிவிட்டு,  முழித்துக்கொள்ளுங்கள் ஐயனே”, என்று சொன்னான்.

 

உடனே அவருக்கு இன்னொருமுறை ஞானம் பிறந்தது.

 

போதனை: சிலநேரங்களில் சிறு துரும்பும் மலையைக்கூட அசைத்துவிடும்.

Wednesday, October 25, 2023

[ 12 ] தீர்க்கப்படமுடியாத கேள்வி.

 

தீர்க்கப்படமுடியாத கேள்வி

 

கடவுள் பிரபஞ்சத்தை படைத்த பிறகு அதில் ஒரு கிரகத்தை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்து பூமி என பெயரிட்டு பின் பலவித ஜீவராசிகளையும் மரம் செடி கொடிகளையும் ஆறுகளையும் கடலையும் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் படைத்து விட்டு அதன்பின் எதற்கும் இருக்கட்டும் என ஒரு ஆண்மகனை இருபது வயதில் படைத்துவிட்டு அவனிடம் சொன்னார்.

 

 மகனே என்தன் உயரிய படைப்பே, உனக்கு இந்த உலகெலாம் சொந்தம். நீ பசியெடுத்தால் கனி காய்கறிகளை உண்பாய், ஆறுகளிலும் அருவிகளிலும் நீந்தி மகிழ்வாய், பச்சைபசும் புல்வெளியில் உறங்குவாய், மான்களோடும் மயில்களோடும் ஓடியாடி மகிழ்வாய், உனக்கென்று எந்தவித கவலையுமில்லை, எனவே ஆனந்தமாக இன்றுபோல் என்றுமே இளமையுடன் ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக”, என்று கூறிவிட்டு மறைந்து போனார்.

 

அந்த ஆண்மகன் கடவுள் சொன்னது போலவே காய்கனிகளை உண்டும் ஆறு அருவிகளில் நீந்தியும் மயிலோடு மானோடு விளையாடியும் ஆனந்தமாக பொழுதைக் கழித்தான். இப்படியாக சிலகாலம் சென்றது.

 

அது வசந்தகாலம். எங்கணும் பச்சைபசேல் என தாவரங்கள் பூத்துக்குலுங்கின. மழை வரும் போலிருந்தது ஆனால் வாராது, அவன் உடலெங்கும் ஒருவித குளிர்ச்சி, வயிற்றில் பனிப்பந்து ஒன்று ஊடுருவியதைப்போல் இனம்புரியாத உன்மத்தம், அவனுக்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

 

அப்போது மயிலொன்று சிறகுகளை விரித்து அங்கேயும் இங்கேயும் சுற்றுவதைக் கண்டான். அவ்வேளை இன்னொரு மயில் இறகுகளற்ற மயில் அதனோடு கூடி முயங்குவதை கண்டான். அதேபோல் இரண்டு முயல்கள், யானைகள், நாய்கள், குதிரைகள் என பலவகையான மிருகங்கள் தமக்குள் உரசிக் கொள்வதும் வினோதமான ஒலிகளை எழுப்பிக்கொள்வதும் பின் வெறிப்பிடித்தாற் போல் ஒன்றுகூடி இயங்குவதையும் கண்டான்.

 

உடனே கடவுளை அவன் அழைத்து  கடவுளே எனக்கென இந்த உலகை படைத்தீர் காய்கனிகளை படைத்தீர் இன்னும் எவ்வளவோ தந்தீர்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை விட்டு விட்டீர்கள், இந்த ஆடுமாடு குதிரை யானைகளெல்லாம் தமக்கென்று ஒரு துணையைப் பற்றிக்கொண்டு சந்தோஷமாக இருக்கின்றனவே! தம் இன்பதுன்பங்களை அவைகளோடு பகிர்ந்து கொள்கின்றனவே, அதுபோல் எனக்கும் ஒரு துணை வேண்டும்”, என்று மனமுருகி கேட்டான்.

 

கடவுள் தான் விட்டாலும் விதி விடாது என்று நகைத்துக்கொண்டே பெண் ஒருத்தியை படைத்தார். பின்பு மறைந்து போனார்.

 

ஆண் அவளை கண்டு சொக்கி போய் நின்றான். அவ்வளவு பேரழகு அவள்! பாதம் துவங்கி உச்சந்தலை வரையில் மாசுமறுவின்றி பார்க்கும் பார்வையே வழுக்கின்றதே, பின் தொட்டால் கைகள் எப்படி அங்கங்களில் நிற்கும்? தந்ததால் செதுக்கியது போன்ற உடல் வண்ணம் ! ஆங்காங்கே நிறம் தங்கமென கார்மேகமென கருவண்டென கோவைப்பழமென மாறுகிறதே என்ன விந்தை! அவளின் உடல் மணம்! ஆஹா தெய்வமே! எப்பேறு பெற்றேன் நான்! அவன் அவளை அள்ளிக்கொண்டான் உச்சி முகர்ந்து கொண்டாடினான் ஆசைத்தீர அனுபவித்தான்! இப்படியே சிலகாலம் போனதும் அவனுக்கு சலிப்பு ஏற்ப்பட்டது. கடவுளை அழைத்தான்.தன் குறைகளை கூறினான்.

 

 ஐய்யோ கடவுளே எனக்கென்று எப்படி படைத்தாயோ இபபெண்ணை?ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பின்னர் நாட்கள் கழியக்கழிய அவள் ஏதோவொன்றை வருந்தி நின்றாள். என்னவென்று கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள். சதாசர்வகாலமும் என்னால் முடியாத காரியங்களை செய்யும்படி கேட்கிறாள். அதோ அந்த மயிலைப்பாருங்கள், அவை எப்படியெல்லாம் கூடிக்கொண்டே மயங்குகின்றன, இதோ இந்த முயல்களைப் பாருங்கள், அவை ஆனந்தமாக சுற்றித் திரிகின்றன, அவை போல நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என நச்சரித்துக்கொண்டே இருக்கிறாள், எனவே இவள் எனக்கு வேண்டாம், அழைத்துக்கொண்டு செல்லுங்கள்”, என்று கூறி நின்றான்.

 

“அப்படியே ஆகட்டும்”, என்ற கடவுள் அவளை தன்னுடன் அழைத்துக்கொண்டு மறைந்து போனார்.

 

சிலகாலங்களுக்கு அந்த ஆண் தனிமையில் இருந்தபடி ஏகாந்தத்தை அனுபவித்தபடி ஆனந்தமாக இருந்தான். அடுத்த வசந்தகாலமும் வந்தது. இப்போது விலங்குகள் யாவுமே பழையபடி தமக்குள் கூடி முயங்குவதை மயங்குவதை கண்ணுற்ற அவனுக்கு அந்த பெண்ணின் நினைப்பு உடலெங்கும் மனமெங்கும் தோன்றி இம்சை கொடுக்கலாயிற்று. “ஐய்யோ வராது வந்த செல்வமாக வந்த அந்த புதையலை இரத்தினத்தை நாம் நம் அறிவுக்கெட்டதனத்தால் இழந்து போனோமே, இனிமேல் என் வாழ்க்கை அவளின்றி ஒருகணமும் ஆனந்தமாக நகராது, எனவே அவள் வேண்டும்”, என்று நினைத்து கடவுளை அழைத்து அவளை மீண்டும் வேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.

 

கடவுள் மனதுக்குள் சிரித்தப்படி ஒன்றும் சொல்லாமல் அந்தப்பெண்ணை அழைத்து அவனிடம் கொடுத்துவிட்டு மறைந்து போனார்.

 

“ஆஹா நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டுமென நினைத்த அவன் அவளுடன் வாழலானான். ஆனால் சிலகாலந்தான்! மீண்டும் கடவுளை அழைத்தான், “ஐய்யோ கடவுளே, இவளை என் கண்படாமல் எங்காவது அழைத்துச்சென்று மறைந்து விடுங்கள், எனக்கு இவளை பிடிக்கவேயில்லை, சதா ஏதேனும் நச்சரித்துக்கொண்டே இருக்கிறாள், அதனால் நான் தவம் செய்யப்போகிறேன், தயைசெய்து இவளை அழைத்துக்கொண்டு சென்றுவிடுங்கள்”, கடவுளும் அவனுடைய வேண்டுகோளை இரண்டாவது முறையாக நிறைவேற்றிக் கொடுத்தார்.

 

இப்போது தன்னந்தனிமையாக அவன் வாழத்தொடங்கினான். மூன்றாவது தடவையாக வசந்தகாலமும் வந்தது. ஆனால் முன்னர் பட்ட கஷ்டங்களை நினைத்து அவன் பொறுமை காத்தான், ஆனால் சிலநாட்களுக்குதான்! அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை, “ஆஹா என்ன இது அவள் இல்லாமல் என்னால் இருக்கவே  முடியாது போலிருக்கிறதே, ஒரு சின்ன வேலைக்குக்கூட அவள் என் பக்கத்தில் இருக்க வேண்டும் போலிருக்கிறதே, ஐய்யோ கடவுளே உடனே அவளை எனக்கு தருவாயாக”, வேண்டினான்.

 

உடனே கடவுள் அவன்முன் உதயமாகி அவளை தந்து அருளினார். ஆனால் சிலகாலத்தில் அவனுக்கு அவள் மேல் சலிப்பு ஏற்படவே மீண்டும் கடவுளை அழைத்து அழைத்துச்செல்லும்படி கூறினார். இந்தமுறை கடவுளுக்கே கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

 

“அடேய் மானிடப்பதரே, நீ வேண்டுமென்று சொல்வாய், பின்னர் வேண்டாம் என்று சொல்வாய், அதற்கு அடிபணிந்து நானும் வேலை செய்தேன், ஆனால் இனிமேலும் இதுபோன்று நடக்காது. நீ எப்போது உறுதியாக ஒரேமுடிவை எடுக்கிறாயோ அப்போது சொல், நிறைவேற்றி வைக்கிறேன், அதாவது இந்தப்பெண் உனக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று சொல், ஆனால் ஒரு முடிவை நீ எடுத்துவிட்டால், பிறகு அந்த முடிவை மாற்ற நான் நினைத்தாலும் கூட முடியாது, எனவே நன்றாக யோசித்து பதிலை திண்ணமாக உரைப்பாயாக” இவ்வாறு சொன்ன கடவுள் அந்தப்பெண்ணை அவனிடமே விட்டுவிட்டு மறைந்து போனார்.

 

அன்றிலிருந்து பெண்ணை தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என சிலகாலம் நினைப்பதும், இவள் எப்போதுமே வேண்டாம் என சிலகாலம் நினைப்பதுமாக அந்த ஆண் வாழ்ந்து வருகிறான்.

 

[ இந்தக்கதை ஒரு ஆண்பார்வையில் எழுதப்பட்டது. ஒரு பெண் பார்வையில் எழுதப்பட்டால் இந்த கதையின் முடிவானது ஒருவேளை மாறக்கூடும் ]

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...