Saturday, October 14, 2023

[1.]  நன்றே செய்க, அதை அன்றே செய்க.

 

பண்டைய திபெத் நாட்டில் மாபெரும் மலைத்தொடரின் உச்சியிலிருந்த அரண்மனையில் ஒரு அரசன் வாழ்ந்து  வந்தான். இயல்பாகவே அவன் நல்லவன்; ஆனாலும் கிறுக்குத்தனமான காரியங்களை அவ்வபோது செய்து வந்தான். எல்லாம் புகழ் பெறுவதற்காக!

 

ஆண்டு முழுவதும் மழை பொழிகின்ற அந்த நாட்டில் குளங்கள் வெட்டி நீரை சேமிப்பான். எலிகளை ஒழிக்கிறேன் என சபதம் மேற்கொள்வான், காடுகளை அழித்து நாட்டை பெரிதாக்குகிறேன் என்று சூளுரைப்பான், ஆனால் இதுமாதிரியான கிறுக்குத்தனங்கள் நாட்டு மக்களுக்கு வேடிக்கையாக இருந்ததால், அவர்கள் தத்தமது வேலைகளை கவனிக்க போய் விடுவார்கள்.

 

இதனால் அந்த அரசன் மக்களின் கவனமெல்லாம் தன்பக்கம் திரும்ப என்ன வழி என்று நாளெல்லாம் சிந்தித்து இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தே விட்டான்.

 

உலகில் உள்ள அரிய ஞானப்பொக்கிஷங்களின் அற்புதமான நூல்களை கண்டுபிடித்து, அவற்றையெல்லாம் படித்து, ஞானவானாகி உலகின் துன்பங்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவது. நெடுநாள் யோசித்து பிறந்த இந்த யோசனைக்கு செயல் வடிவமும் கொடுக்கவும் அந்த அரசன் ஆரம்பித்தான்.

 

முதலில் மலைத்தொடரில் பிரமாண்டமான நூலகத்தை கட்டி முடித்தான். பிறகு தன் அரசவையில் இருந்த மந்திரிகள், தளபதிகள் யாவரையும் அழைத்து, பொற்காசுகளை அள்ளி அள்ளி தந்தான், பிறகு அவர்களிடம் ஆணை பிறப்பிக்க ஆரம்பித்தான்.

 

 “உடனடியாக நீங்கள் எல்லோரும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று ஆங்கிருக்கும் அறிவு ஞானம் சம்பந்தப்பட்ட ஓலைச்சுவடிகளை திரட்டி வாருங்கள். எனவே நான் அவற்றை படித்து பண்பட்டு ஞானவான் ஆகி விடவேண்டும்”.

 

அரசனின் கட்டளையை சிரமேற்கொண்ட அவர்களும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று அறிவுபொக்கிஷ நூல்களை திரட்டிக்கொண்டு வர ஆரம்பித்தனர். நூலகத்தின் அலமாரிகள் எல்லாம் மெள்ளமெள்ள ஓலைச்சுவடிகளால் நிரம்பலாயிற்று. அரசனும் அவற்றை பார்த்துபார்த்து மகிழ்ந்தான். ஆனால் ஓலைச்சுவடிகளில் ஒன்றையாவது படிக்க வேண்டுமென்ற எண்ணம் அவனிடம் பிறக்கவில்லை. நூலகம் முழுவதும் நிரம்பி வழிந்தால் அப்போது படிக்கலாம் என்பது அவனுடைய எண்ணம்.

 

நாட்கள் வாரங்கள் ஆகி ஆண்டுகள் பலவும் கடந்தன, நூலகத்தின் பெரும்பாலான அலமாரிகள் ஓலைச்சுவடிகளால் நிரம்பி விட்டன. அரசனுக்கும் வயதாகி கொண்டே வந்தது. இறுதியில் பிரதான அமைச்சர் அவனிடம் வந்து, நூலகம் நிரம்பி விட்டது மற்றும் உலகில் உள்ள அத்தனை அறிவுச்செல்வங்களும் அதில் குவிந்து கிடக்கின்றன என்றும் அறிவித்தார்.

 

இப்போதுதான் அந்த அரசனுக்கு உண்மையான வேலை. ஆனால் இரண்டுநாட்களாக அவனுக்கு உடல்நிலை சரியில்லை, வயதாகின்றது அல்லவா? மருத்துவர் வந்து சோதித்துப்பார்த்து விட்டு, அரசனின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும் இன்னும் சிலவாரங்களுக்கே உயிருடன் இருப்பான் என்றும் சொல்லி விட்டார்.

 

அப்போது நூலக நூல்களின் கதி? அவற்றை படித்து முடிக்க வேண்டுமானால் ஒருவனின் வாழ்நாள் போதாதே! ஐய்யோ நான் என்ன செய்வேன்? என்று சிந்தித்த அரசனுக்கு மற்றொரு திட்டம் உதித்தது. உடனே அறிவாளிகள் புத்திமான்கள் எல்லோரையும் ஒன்று கூட்டினான்.  “உடனே  நீங்கள் அனைவரும் நூலகத்திற்கு சென்று அங்கிருக்கும் நூல்களை படித்து மையக்கருத்துகளை உணர்ந்து கொண்டு, பிறகு எந்த கருத்து தலைசிறந்ததாக உள்ளதோ அதை எனக்கு சொல்லவேண்டும்”, என்று கட்டளையிட்டான்.

 

எல்லோரும் சென்று நூல்களை படிக்க ஆரம்பித்தனர். தத்துவம், இலக்கியம், ஆன்மீகம், அறிவியல், உணவு, விவசாயம், நீராதாரம் போன்ற அனைத்து துறைகளை சேர்ந்த புத்தகங்களை அவர்கள் தனித்தனியாக படித்து முடித்தனர். இப்போது எந்த துறை சிறந்தது என்று அவர்கள் விவாதிக்க ஆரம்பித்தனர். நாட்கள் போயின, ஆனால் விவாதம் முடியவேயில்லை. அது என்றுமே முடியாது.

 

இறுதியில் ஞானவானாக ஆசைப்பட்ட அரசன் சடலமாக வீழ்ந்து போனான்.

 

ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே செய்ய வேண்டும். முழுமையாக செய்ய வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...