Sunday, October 15, 2023

[2] கவலை இல்லாத மனிதன்

 

[2] கவலை இல்லாத மனிதன்

 

அந்த நகரத்தின் விளிம்பில் இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கென்று யாருமில்லை. உற்ற நண்பர்களும் கிடையாது. தினமும் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பும் வழியில் உள்ள பெருமாள் கோயிலில் ஒரு மணிநேரம் அமர்ந்து தன் மனதிற்குள்ளே கடவுளிடம் பேசிக் கொண்டிருப்பான்.அவனுடைய பேச்சு எல்லாமுமே கடவுளை குறை சொல்வது தான்.

 

அதோ அந்த பெரிய மனிதரை பார்த்தாயா? எவ்வளவு பெரிய பணக்காரன், ஆள் அம்பு சேனை என வசதியோடு சந்தோஷமாக வாழ்கிறான். அவனை அப்படி படைத்த நீ என்னை மட்டும் ஏழையாக படைத்தாயே? உனக்கு கருணையே இல்லையா? இதோ பார்! அந்த இளைஞனை! கட்டுறுதி மிக்க காளையென எத்துணை அழகாக நடந்து வருகிறான், ஐயோ அவனை அவ்வளவு அழகாக படைத்த நீ, என்னை மட்டும் அசிங்கமாக படைத்தாய், என்ன காரணம்? இதோ பார் அந்த குடும்பஸ்தனை! அவன் மனைவி பிரமாதமான அழகு, அவன் குழந்தையோ படுசுட்டி, அவர்கள் எவ்வளவு இன்பமாக இருக்கிறார்கள், என்னையும் படைத்தாயே, வாழ ஒரு துணையின்றி, என்ன காரணமோ?

 

இப்படியாக சுமார் ஒருமணி நேரம் கடவுளை குறை சொன்ன பின்னால் வீடு வந்து உணவுண்டு தூங்கிவிடுவான். பிறகு மறுநாள் காலையில் வேலை. பிறகு மாலையில் கோயிலுக்கு வருவான். இதேகதை பல மாதங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

 

ஒருநாள் அவன் தூக்கத்தில் கனவொன்று வந்தது. அதில் கடவுள் அவன் முன் தோன்றி, உன் கவலைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்து சேர், என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

 

ஆஹா நம் வேண்டுதலுக்கு உரிய பலன் கிடைத்தே விட்டது என்று அகம் மகிழ்ந்த அவன் தன் கவலைகளை ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டான். மூட்டை என்னமோ மிகச்சிறியது. அவன் அவற்றை கட்டும்போதே பல கவலைகள் அர்த்தமற்றதாக தோன்றி அபபோதே மறைந்து விட்டது. இப்போது அவன் சுலபமாக தூக்கிகொண்டு போகுமளவுக்கு சின்னஞ்சிறியதாய் அது இருந்தது.

 

வீட்டை விட்டு வெளியே வந்தவன், ஊர் ஜனங்களெல்லாம் வரிசைவரிசையாக போய்க்கொண்டிருப்பதை கண்டு மலைத்துப்போனான். எல்லோர் கைகளிலும் தோள்களிலும் தலைகளிலும் கவலையின் மூட்டைகள் இருந்தன. ஒருசிலர் அதை தூக்க முடியாமல் தரையோடு தரையாக இழுத்துக்கொண்டு சென்றனர்.

 

அவன் பொறாமைப்பட்ட அந்த பெரியமனிதர்  தன் கவலைகளை ஒரு குதிரைவண்டி முழுவதிலும்  ஏற்றிகொண்டு போய்க்கொண்டிருந்தார். அந்த வண்டி போதாமல் அவனுடைய வேலைக்காரர்கள் வேறு அவனுடைய கவலை மூட்டைகளை சுமந்திருந்தனர். அவர்களின் இடுப்பில் அவர்களுடைய சொந்த மூட்டைகள் சிறு அளவில் இருந்தன. அவன் தினம்தினம் பார்த்து பொறாமைபட்ட இளைஞனும் குடும்பஸ்தனும் சொல்லமுடியாத அளவில் கவலைகளை தாங்கி நிலைதடுமாறி நடந்து கொண்டிருந்தனர்.

 

இதையெல்லாம் பார்த்த அவன், நாம் தான் கவலையுள்ளவன் என்றும், மற்றவர்கள் கவலையற்றவர் என நினைத்தோம், ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளதே, சரி கோயிலுக்கு சென்று பார்க்கலாம் என்று படி இறங்கினான்.

 

கோயிலுக்கு சென்றவன் அங்கே ஊர் ஜனங்கள் எல்லோரும் தத்தமது கவலை மூட்டைகளோடு நின்றிருப்பதை பார்த்தான். அப்போது கடவுளின் குரல் ஒலித்தது. “எல்லோரும் அவரவர் கவலை மூட்டைகளை கோயில் சுவரின் ஆணிகளில் மாட்டவும். பின் சற்றுநேரம் கழித்து மணி ஒலித்ததும் யார்யாருக்கு எந்தெந்த கவலை மூட்டை வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு போகலாம்".

 

அவன் முன்னமே இருப்பதிலேயே சிறிய மூட்டை--- அதிகப்பட்சம் அதில் இரண்டே கவலைகள் தான் இருக்கக்கூடும்---அதை தேர்ந்தெடுத்துவிட்டான். மணி அடித்ததும் அதை எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான். அப்போதுதான் வேறொரு விஷயம் உறைத்தது. தன் கவலைகளில் உதாரணமாக  ‘தலைவலி’ இருக்கலாம். அது சாதாரண வியாதி. வந்து விட்டாலும் கவலையில்லை. என்ன மருந்து எடுப்பது என்று அவனுக்கு தெரியும். இப்படித்தான் மற்ற கவலைகளும் சின்ன பாதிப்பை உண்டுசெய்வது. ஆனால் தான் தூக்கிக்கொண்டு போகும் கவலையின் மூட்டையில் ஒருவேளை புற்றுநோயாக இருந்து விட்டால்?. நமக்கு திருமணம் ஆகவில்லையே என்ற கவலை; அதோ அவனுடைய பிரச்சனை, மூன்று மனைவிகள் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறான். இப்படியெல்லாம் யோசித்த அவன் தன்னுடைய சொந்த மூட்டையே சிறப்பானது என்று, தன் மூட்டைக்கு பக்கத்திலேயே நின்று கொண்டான். அவன் நினைப்பை உள்வாங்கியது போல் எல்லோரும் அவரவர் கவலை மூட்டைகளுக்கு பாதுகாவலாக நின்றனர்.

 

மணி ஒலித்தது. உடனே அவன் தன் மூட்டையை எடுத்துக்கொண்டோடி வீட்டிற்கு வந்து விட்டான். அன்றிலிருந்து கடவுளை குறை சொல்லாமல் இன்புற்று வாழ்ந்திருந்தான்.


போதனை. கவலைகள் என்பது பெரும்பாலும் மாயத்தோற்றமே! அதை நினைத்துக் கவலைக்கொள்வதில் அர்த்தமேயில்லை. சற்று உற்றுப்பார்த்தால் அவை சூரியனைக்கண்ட பனியென மறைந்துபோகும்.

No comments:

Post a Comment

[ 17 ] வில்வித்தை விற்பன்னன்.

[17]  வில் வித்தை விற்பன்னன். பண்டைய ஜப்பான் நாட்டில் வில்வித்தையை மட்டுமே கற்றுக்கொடுக்கும் குருகுலம் ஒன்று இருந்து வந்தது. அதில் இருபது வய...